மினி ஸ்டுடியோஸ் சார்பில் S வினோத்குமார் தயாரித்துள்ள திரைப்படம் எனிமி. ஆனந்த் சங்கர் எழுதி இயக்கியுள்ளார். பாடல்களுக்கு S தமன் இசையமைத்துள்ளார். சாம் C S பின்னனி இசையமத்துள்ளார். R D ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தை தொகுத்துள்ளார்.
எனிமி படத்தில் நடிகர் விஷால் சோழன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் ஆர்யா ராஜீவ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ் பாரிராஜன் கதாப்பாத்திரத்தில் ராஜீவ் தந்தையாக நடித்துள்ளார். தம்பி ராமைய்யா ராமலிங்கம் கதாப்பாத்திரத்தில் சோழனின் தந்தையாக நடித்துள்ளார். மிருனாளினி ரவி அஸ்விதா கதாப்பாத்திரத்தில் சோழனின் காதலியாக நடித்துள்ளார். மம்தா மோகன்தாஸ் அனிஷா கதாப்பாத்திரத்தில் ராஜீவ் மனைவியாக நடித்துள்ளார். கருணாகரன் பாபு கதாப்பாத்திரத்தில் சோழனின் நண்பனாக நடித்துள்ளார். G மாரிமுத்து போலிஸ் அதிகாரி ஈஸ்வர மூர்த்தி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மாளவிகா அவினாஷ் இந்திய வெளியுறவு துறை அமைச்சராக நடித்துள்ளார். ஜார்ஜ் மரியான் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதைக்கரு.:
ஒவ்வொரு தந்தையும் தன் மகன் மீது தன் கணவுகளையும் ஆசையையும் திணிக்கின்றனர். அது தவறான அடிப்படை என்ற கதைக்கருவை கொண்டு எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் எனிமி.
கதை.:
ராமலிங்கம் ஊட்டியில் மளிகைக்கடை நடத்துபவர். தூத்துக்குடியில் ஒரு மக்கள் பிரச்சனையில் தன் மனைவியை இழந்தவர். தன் மகன் சோழனுடன் இருக்கின்றார். தன் மனைவி பொதுப்பிரச்சனையில் இறந்த காரணத்தால் தானும் மகன் சோழனும் எந்த பிரச்சனையான விஷயத்திலும் தலையிடக்கூடாது என்று மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பவர். ஆனால் சோழனை பொத்தி பொத்தி வளர்ப்பதால் அவரது செயல்பாடுகள் சோழனுக்கு சலிப்பை ஏற்படுத்துகின்றது.
ராமலிங்கத்தின் எதிர் வீட்டிற்கு குடிவருபவர் போலிஸ் உயர் அதிகாரியாக இருந்த பாரிராஜன். இவர் தன் மகன் ராஜீவ்வுடன் வசிக்கின்றார். தன் மகனையும் சிறந்த போலிஸ் அதிகாரியாக வரவேண்டுமென்று சிறுவயதிலேயே கடுமையான பயிற்சிகளை கொடுக்கின்றார்.
அதை மறைந்திருந்து பார்க்கும் சோழன் அவனும் அந்த பயிற்சிகளை மேற்கொள்கின்றான். இதை பார்த்த பாரிராஜன் அவனை தன் மகனுடன் சேர்ந்து பயிற்சி மேற்கொள்ள வைக்கின்றான். ராஜீவிடம் போட்டியிருந்தால் தான் நன்றாக பயிற்சி செய்யமுடியுமென்று பாரிராஜன் சொல்கின்றார்.
ராஜீவைவிட சோழன் பயிற்சிகளை நன்றாக செய்வதை பார்த்த பாரிராஜன். சோழனை வெகுவாக பாராட்டுகின்றார். இதனால் வெறுப்படைகின்றான் ராஜீவ். ஒரு நாள் பாரிராஜன் கொல்லப்படுகின்றார். அவர் கொல்லப்படும் போது வீட்டில் ராஜீவ், சோழன் மட்டுமே இருக்கின்றனர். அவர்களை விசாரிக்க காவல் நிலையத்திற்கு அழைத்து செல்கின்றனர்.
ராமலிங்கம் காவல் நிலையத்திற்கு சென்று தன் மகன் சோழன் பக்கத்து வீட்டுக்கு எதிர்பாரதவிதமாக சென்றான் என்று சொல்லி கூட்டி வருகின்றான். சோழன் ராஜீவ் காவல் நிலையத்தில் இருப்பதாகவும் அவனையும் கூட்டி வருவதாகவும் சொல்கின்றான். ஆனால் ராமலிங்கம் சோழனை மட்டும் அழைத்துக்கொண்டு செல்கின்றான். தன் மகன் எந்த பிரச்சனையிலும் மாட்டிக்கொள்ளக்கூடாது என்ற எண்ணத்தில். ராஜீவ் மற்றும் சோழன் இருவரும் பிரிகின்றனர்.
தற்போது சிங்கபூரில் தமிழர்கள் பகுதியில் மளிகை கடை வைத்திருக்கின்றார் ராமலிங்கம். அங்கே தமிழர்கள் பகுதியில் வசிப்பவர்களுக்கு பிரச்சனையென்றால் அவர்களுக்கு உதவுகின்றான். சோழன். சைனா கம்பெனிக்காரன் தொழிலாளர்களை ஏமாற்றி மறைத்து வைத்திருந்த பாஸ்போர்ட் அனைத்தையும் எடுத்து தமிழக தொழிலாளர்களுக்கு கொடுக்கின்றான். அவன் எடுக்கும் ரிஸ்க்குகளை தன் தந்தை ராமலிங்கத்திற்கு தெரியாமல் பார்த்துக்கொள்கின்றான். அவனுக்கு அவன் நண்பன் பாபு துணையாக இருக்கின்றான்.
ஒரு இடத்தில் பொருட்கள் டெலிவரி செய்ய செல்லும் சோழன் அங்கே ஒரு கம்யூட்டரை ஹேக் செய்து ஒரு ப்ராஜக்ட் ரிப்போர்ட்டை ஒரு பெண்ணுக்கு கொடுத்து உதவுகின்றான். அந்த பெண்னின் தோழி அஸ்விதா அவரும் அதை அறிந்து அவரிடம் உதவி கேட்க சோழனின் கடைக்கே செல்கின்றாள். ஆனால் ராமலிங்கத்தின் முன் அதற்கும் தனக்கும் சம்மந்தமில்லை என்று சொல்கின்றான் சோழன். அவள் கல்லூரிக்கு சென்று உதவி செய்வதாக சொல்கின்றான். இருவருக்குமிடையே காதல் மலர்கின்றது.
இந்தியா சைனா பொருள்கள் மொபைல் ஆப் போன்றவைகள் மீது கடும் நிபந்தனை விதிக்கின்றது. அதனால் கோபத்தில் இருக்கும் சைனா நிறுவனங்கள் வாடகை கொலையாளியை வைத்து சிங்கப்பூர் வரவிருக்கும் வெளியுறவு அமைச்சரை கொலை செய்ய திட்டம் தீட்டுகின்றனர்.
சிங்கப்பூர் தமிழர்கள் பகுதியில் கேஸ் கடையில் விபத்து ஏற்படுகின்றது. தமிழர்கள் பலர் இறக்கின்றனர். ஆனால் அது விபத்து அல்ல உருவாக்கப்பட்டது என்பதை சோழன் போலிஸ் அதிகாரி ஈஸ்வர மூர்த்தியிடம் சொல்கின்றான். பல வழக்குகளில் அவருக்கு சோழன் உதவியுள்ளான்..
சிங்கப்பூர் வரும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தமிழர்கள் பகுதிக்கு சென்று அங்கு இறந்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக தகவல் வருகின்றது.
சிங்கப்பூருக்கு அரசு பயணமாக வரும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை கொல்வது கடினம். அவர் வரும் பாதைகள் ரொம்ப பாதுகாப்பானதாக இருக்கும் காரணத்தால் அவரை வேறு பொது இடத்திற்கு செல்ல உருவாக்கப்பட்டதே கேஸ் கம்பெனி விபத்து. இதை கண்டுபிடித்து சோழன் அதை தடுக்க முயல்கின்றான். ஆனால் முடியாமல் போக மீட்டிங்க் நடக்கும் இடத்திற்கு செல்லும் சோழன். வெளியுறவு அமைச்சரை சுடுகின்றான். அவனை கைது செய்கின்றனர்.
ஆனால் சோழன் சுட்டது அமைச்சரின் Pacemaker கருவியைத்தான் காரணம் அதை ஹேக் செய்து மாரடைப்பு ஏற்படுத்தி கொலை செய்ய திட்டமிட்டு இருந்தை தெரிவிக்கின்றான். கொலைகாரன் மிகவும் அருகில் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றான்.
அந்த தகவலின் பேரில் அதிகாரிகள் கொலையாளி ராஜீவை கைது செய்கின்றனர். ராஜீவ் மிகப்பெரிய வாடகை கொலையாளி. தடயமே இல்லாமல் மிகப்பெரிய கொலைகளையும் சர்வ சாதாரனமாக செய்யும் ஹைடெக் வாடகை கொலையாளி. தனக்கு கீழ் உலகமெங்கும் ஆட்களை நியமித்திருப்பவன்.
ஹோட்டலில் ராஜீவை கைது செய்து அழைத்து செல்லும் போலிஸ் அதிகாரிகளின் குடும்பத்தை பணயமாக வைத்து தன்னை கண்டு பிடிக்க உதவிய நபர் சோழன் என்பதை கண்டுபிடிக்கின்றான். தனக்கு பதில் வேறு ஒருவனை சரணடைய செய்துவிட்டு தப்பிக்கின்றான்.
ராஜீவ் முதன் முதலில் தோல்வியுற்றது மட்டுமின்றி மாட்டிக்கொண்டதும் இந்த கொலையில் தான். தன் தோல்வியின் பின்னனியில் இருப்பது தன்னுடன் சிறுவயதில் இருந்த சோழன் என்று தெரிந்து அவனை சந்திக்க செல்கின்றான்.
ராஜீவிற்கு போலிஸ் வேலையில் விருப்பமில்லை ஏராளமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே சிறுவயதுமுதல் ஆசைப்படுகின்றான். தன் தந்தையிடம் கற்ற திறமைகளை தவறான வழியில் பயன்படுத்தியதை தந்தை கண்டு பிடித்ததை அறிந்து சாட்சியே இல்லாமல் தந்தை பாரிராஜனை கொலைசெய்ததும் அவனே என்று சோழனிடம் சொல்கின்றான். அதே போல் இதுவரை எந்த கொலையிலும் தான் தோற்றதில்லை முதன் முறையாக இதில் தான் தோற்றதாகவும் அதற்கு சோழன் காரணம் என்பதால் அவனுக்கு நெருங்கிய ஒருவரை கடத்தி கொல்லப்போவதாக சவால் விடுகின்றான்.
சோழன் தனக்கு நெருங்கியவர்களை காப்பாற்ற ராஜீவின் கர்பமுற்றிருக்கும் மனைவி அனீஷாவை கடத்துகின்றான் ராஜீவ் போலிஸில் சரணடைந்தால் அவன் மனைவியை பாதுகாப்பாக இந்தியாவிற்கு அனுப்பி வைப்பதாக வாக்கு கொடுக்கின்றான்.
அனீஷா ராஜீவ் பள்ளி தோழியாக இருந்தவள். அனீஷாவின் மாமா சூதாட்ட பைத்தியம். சூதாட்டத்தில் ஏராளமாக இழந்தவன். ஒரு கட்டத்தில் அனீஷாவை பந்தயமாக வைத்து விளையாடி தோற்றவன். அனீஷாவை அவள் மீது கொண்ட காதலால் அவளை காப்பாற்ற அனீஷாவின் மாமாவை அனீஷாவுடன் சேர்ந்து ராஜீவ் கொலை செய்கின்றான். அது முதல் இருவரும் சேர்ந்து இருந்தாலும் தொழில்முறை பாதிப்பை உணர்ந்து வெளியுலக பார்வைக்கு தெரியாமல் பிரிந்து இருக்கின்றனர்.
தன் மனைவிக்காக எதையும் செய்யும் ராஜீவ் சோழன் பேச்சை கேட்டு போலிஸில் சரணடைகின்றான். சோழன் அனீஷாவை விமான நிலையத்தில் விட்டுவிட்டு செல்கின்றான். ஆனால் ராஜீவ் தொழில் முறை எதிரிகளால் அனீஷா கொல்லப்படுகின்றாள்.
சிறையிலிருக்கும் ராஜீவ் அனீஷாவை சோழன்தான் கொன்றான் என்று எண்ணுகின்றான். அதனால் சிறையிலிருந்து தப்பி சோழன் எப்படி பாசம் வைத்த தன் மனைவியை கொன்றானோ. அதே போல் அவன் பாசம் வைத்திருப்பவர்களை கொல்ல வெறியோடு திரிகின்றான்.
ராஜீவ் சிறையிலிருந்து தப்பியதையும் அனீஷா கொல்லப்பட்டதையும் அறிந்த சோழன் அவன் குடும்பத்தினரை காப்பாற்ற முனைகின்றான். தன் காதலி அஸ்விதா நண்பன் பாபுவை அழைத்துக்கொண்டு விமான நிலையம் செல்கின்றான். தன் அண்டைவீட்டில் வசிக்கும் ஜார்ஜ் மரியானிடம் தன் தந்தையை அழைத்துக்கொண்டு அவரிடம் எதுவும் சொல்லாமல் விமான நிலையத்திற்கு அழைத்து வர சொல்கின்றான்.
சோழனின் தந்தையை கடத்த செல்லும் ராஜீவ் அடியாட்கள் ராமலிங்கம் தப்பி சென்று விட்டதாக சொல்கின்றனர். உடனே அடியாட்களிடம் சொல்லி சிங்கப்பூர் தமிழர்கள் இருக்கும் பகுதியிலிருந்து அனைத்து குழந்தைகளையும் கடத்த சொல்கின்றான் ராஜீவ். அவர்கள் கடத்தி சென்ற குழந்தைகளில் ஜார்ஜ் மரியானின் குழந்தையும் இருக்கின்றது. ராஜீவ் அவர்களிடம் எனக்கு தேவை ராமலிங்கம் மட்டுமே. அவரை ஒப்படைத்தால் குழந்தைகளை விட்டுவிடுவதாக சொல்கின்றான்.
ராமலிங்கத்தை அழைத்துக்கொண்டு விமான நிலையம் செல்லும் ஜார்ஜ் மரியான் இந்த தகவல் தெரிந்து விமான நிலையம் செல்லாமல் மீண்டும் அவர்கள் வசிக்கும் பகுதிக்கே செல்கின்றான்.
அப்போது ராஜீவ் உங்கள் குழந்தைகள் உயிரோடு வேண்டுமேன்றால் அவர்களில் யாராவது ராமலிங்கத்தை கொல்ல வேண்டுமென்று சொல்கின்றான். ஆனால் யாரும் அவரை கொல்ல முன்வரவில்லை. காரணம் அவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். ஒருவர் மீது ஒருவர் பாசம் வைத்திருப்பவர்கள்.
இதற்கிடையில் சோழன் தன் தந்தை விமான நிலையம் வராமல் இருப்பதை கண்டு ஏதோ பிரச்சனை நடந்திருப்பதை உணர்ந்து அஸ்விதா மற்றும் பாபுவை விமானத்தில் அணுப்பி வைக்கின்றான். குழந்தைகள் கடத்தப்பட்ட விஷயம் தெரிந்து குழந்தைகள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவர்களை காப்பாற்றுகின்றான் சோழன்.
குழந்தைகள் காப்பாற்றப்பட்ட விஷயத்தை தெரிந்து கொள்கின்றான் ராஜீவ். சோழன் குழந்தைகளை அழைத்து வருவதற்குள் ராமலிங்கத்தை கொலை செய்ய திட்டம் போடுகின்றான். குழந்தைகள் காப்பாற்றப்பட்ட விஷயம் தெரியாத ராமலிங்கத்திடம் உன்னை சுற்றி இருப்பவர்கள் உன்னை கொல்ல மாட்டார்கள். குழந்தைகள் உயிரோடு வேண்டுமென்றால் நீயே விஷம் குடித்து செத்துவிட்டால் குழந்தைகளை விட்டுவிடுவதாக சொல்கின்றான். ராமலிங்கம் விஷம் குடித்து இறந்து போகின்றார். அங்கே குழந்தைகளை அழைத்து வரும் சோழன் தந்தை மரணத்திற்கு பழிவாங்க ராஜீவுடன் மோதுகின்றான். ராஜீவை கொல்கின்றான். அவன் மரணதருவாயில் அவன் மனைவியை கொன்றது அவன் எதிரிகள் தான் என்று சொல்கின்றான்.
தன் தந்தையின் கல்லரைக்கு வருடந்தோறும் அஞ்சலி செலுத்த வரும் சோழன் ராஜீவ் கல்லரைக்கும் சென்று அஞ்சலி செலுத்துகின்றான். சோழன் மகன் அப்பா ராஜீவ் கெட்டவர் என்று அம்மா சொல்லியிருக்கின்றார். அப்புறம் ஏன் அவருக்கு அஞ்சலி செலுத்துகின்றீர்கள் என்று கேட்கின்றான். அதற்கு சோழன் அவன் மீது தன் விருப்பத்தை அவர் தந்தை திணித்ததால் தான் அவன் கெட்டவனாக மாறினான், நான் உன் மீது என் ஆசையை திணிக்க விரும்பவில்லை. நீ பெரியவனாகி என்ன செய்ய வேண்டும் என்பதை நீயே தீர்மாணித்துக்கொள் என்று தன் மகனிடம் சொல்கின்றான் சோழன்.
பாராட்டுக்குறியவை.:
ஆர்யாவின் கதாப்பாத்திர படைப்பான ராஜீவ் அருமை. அதற்கேற்ப நடித்து மிரட்டியுள்ளார் ஆர்யா.
அனிஷாவாக நடித்திருக்கும் மம்தா மோகன்தாஸ் சில காட்சிகள் வந்தாலும் கதாப்பாத்திரத்திற்கேற்ற நடிப்பை கொடுத்துள்ளார்.
ரிஸ்க் ராமலிங்கம் கதாப்பாத்திரத்தில் தம்பி ராமைய்யா தன் மகனை பாதிப்புகள் எதுவும் அண்டாமல் பாதுகாக்க விரும்புவதிலும், குழந்தைகள் கொல்லப்படுவதை தடுக்க அவர் காட்டும் பதைபதைப்பும் அருமை.
ஒளிப்பதிவு படத்தை பிரமாண்டப்படுத்தியுள்ளது. அதிலும் இறுதியில் வரும் சோழன் ராஜீவ் மோதும் சண்டைக்காட்சி அருமை.
நெருடலானவை.:
அரிமா நம்பி, இருமுகன் படங்களை இயக்கியவரா இவர் என்ற சந்தேகம் வருகின்றது. அந்த படங்களில் இருந்த காட்சிகளின் அழுத்தம் இந்த படத்தில் இல்லை.
ராஜீவ் கதாப்பாத்திரத்தை அழகாக செதுக்கிய இயக்குனர். சோழன் பாத்திர படைப்பில் அழுத்தமே இல்லாமல் உருவாக்கி இருப்பது போல் உணரமுடிகின்றது.
கதாநாயகிகள் என்றால் பேருக்கு இருந்தால் போதும் என்று முடிவெடுத்துள்ளதாக தெரிகின்றது. சோழன் அஸ்விதா காதலிலும் அழுத்தம் இல்லை. அஸ்விதா கதாப்பாத்திரம் வெற்று பாத்திரம்.
தந்தையின் கெடுபிடியால் ஒரு கெட்டவனாவது போல் கதையமைப்பு அந்த பாத்திரப்படைப்பு மேம்போக்காக இருக்கின்றது.
சோழன் ராஜீவ் எதிர்மறை நிகழ்வுகளுக்கான திரைக்கதை மட்டுமே இருக்கின்றது. கதைக்களம் பல இடங்களில் அந்தரத்தில் ஊசலாடுகிறது. சோழன் ராஜீவை கொன்றதுடன் கதை முடிகின்றது.
சொல்லவந்த சர்வதேச அரசியலை தொட்டுமட்டும் சென்றுள்ளனர். அதில் அழுத்தமில்லை.
தொகுப்பு:
மொத்தத்தில் எனிமி திரைப்படத்தில் எனிமி மட்டுமே இருக்கின்றான். அதாவது ஆர்யா மட்டுமே பளிச்சிடுகின்றார். மற்றதெல்லாம் வலுவிழந்த சாராம்சம்.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We are one of the elading SEO company in Chennai. We are doing Web Designing, SEO Services, Google Ads, Social Media Ads and Google Mapping Services.
