28-06-2021 - Admin
“நாட்படு தேறல்” கவிஞர் வைரமுத்துவின் 100 கவிதை தொகுப்பு. இந்த பாடல் தொகுப்புகளை ஆல்பமாக கவிஞர் வைரமுத்து தயாரித்துள்ளார். இதின் சிறப்பம்சம் 100 பாடல்களை 100 பேர் இசையமைத்துள்ளனர். 100 பேர் இயக்கியுள்ளனர்.
பல்வேறு உள்ளடக்கங்களை கொண்டுள்ள இந்த தொகுப்பில் பதினொன்றாவது பாடலாக “அச்சமே அகன்றுவிடு” பெண்ணியம் பேசும் புதுமைப்பெண் காதலுக்கு தடைபோட்டால்.. ஒரு விடுதலை பறவையின் விடுதலை கீதமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை வைரமுத்து எழுதியுள்ளார் இதற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். K.கோகுல் ஒளிப்பதிவு செய்துள்ளார். C.S.பிரேம் குமார் படத்தை தொகுத்துள்ளார். ராம் சிவா நடனமைத்துள்ளார்.. ஸ்ருதிஹாசன் மற்றும் ரம்யா பாடியுள்ளனர்.
சாய் ராஜ்குமார் இயக்கியுள்ளார். சுபிக்ஷா, K.அஸ்வின், பிரவீன் ராஜேந்திரன், K.ரவிசந்திரன் நடித்துள்ளனர்.
அச்சமே - அகன்றுவிடு
மடமே - மடிந்துவிடு
நாணமே - நகர்ந்துவிடு
பயிர்ப்பே - பறந்துவிடு
உடம்பு என்ன விறகா? – நான்
உணர்ச்சி இழந்த சருகா?
காதல் சொல்வது தவறா? – நான்
கல்லில் செய்த சுவரா?
*
தேக்கமடைந்து கிடக்கின்றேன்
ஊக்கமிழந்த வாழ்க்கையிலே
படுக்கைமேலே சிதறுகிறேன்
பாறையில் கொட்டிய பால்போலே
துய்க்காத என்னிதழைத்
துப்பித் தொலையேனோ?
தூண்டாத என்னிதயத்தைத்
தோண்டி எறியேனோ?
பாராத என்னழகைப்
பாயில் புதைப்பேனோ?
தீராத என்காதல்
தீயில் எரிப்பேனோ?
முன்னோர் பொதியே
சுமப்பேனோ – இல்லை
இன்னோர் விதியே
படைப்பேனோ?
*
சாத்திரக் கைதியாகின்றேன்
சாதி படைத்த சிறைகளிலே
மங்கையாக நான் ஏன்பிறந்
தேன் மலையில் முட்டிய நதிபோலே
ஆப்பிரிக்கக் காட்டில்நான்
அணிலாய்ப் பிறப்பேனோ?
அட்லாண்டிக் கடலோடு
ஆராமீன் ஆவேனோ?
மலையாள மலையில்நான்
மணிக்கிளியாய் மாறேனோ?
மனிதப் பிறவியற்று
மனம்போல் வாழ்வேனோ?
கூட்டுப் புழுவாய்
மரிப்பேனோ? – இல்லை
பட்டுப்பூச்சியாய்ப் பறப்பேனோ?