எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் சார்பில் P மதன் தயாரித்துள்ள வெப் சீரிஸ் விலங்கு. பிரசாந்த் பாண்டியராஜ் எழுதி இயக்கியுள்ளார். அஜீஸ் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கணேஷ் சிவா படத்தை தொகுத்துள்ளார்.
விலங்கு படத்தில் விமல், சப் இன்ஸ்பெக்டர் பரிதி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இனியா, ரேவதி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். முனிஷ்காந்த், சப் இன்ஸ்பெக்டர் உத்தமன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். R N R மனோகர், இன்ஸ்பெக்டர் கோட்டிலிங்கம் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பால சரவணன், காண்ஸ்டபில் கருப்பு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ரவி, கிச்சா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ரேஷ்மா பசுபுலேட்டி, செல்வி கதாப்பாத்திரத்தில் கிச்சா மனைவியாக நடித்துள்ளார். K P Y ராமர், செங்குட்டுவன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். S S சக்ரவர்த்தி, டி எஸ் பி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். விவேக் பிரசன்னா, காண்ஸ்டபில் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஏழு பகுதிகளாக உருவாகியுள்ள விலங்கு வெப் சீரிஸ் ஜீ 5 ஒடிடி தளத்தில் 18-02-2022 முதல் ஒளிபரப்பாகின்றது.
கதைக்கரு.:
தொடர்பில்லாத கொலை அதற்கு அடிப்படையான கொலையாளியை தேடி கண்டு பிடிக்கும் எதார்த்த அடிப்படையிலான புலனாய்வு கதை.
கதை.:
வேம்பூர் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக கோடிலிங்கம், சப் இன்ஸ்பெக்டராக பரிதி மற்றும் உத்தமன் ஆகியோர் இருக்கின்றனர். பெண் காவல் அதிகாரிகளாக மண்டோதரி மற்றும் வெண்பா இருக்கின்றனர். காண்ஸ்டபிலாக கருப்பு இருக்கிறான். உமேஷ் காண்ஸ்டபிலாக இருக்கிறான். அங்கே எடுபுடி வேலை செய்து கொண்டிருப்பவன் கிச்சா. அனைத்து போலிஸ் அதிகாரிகளுக்கும் பிடித்த வேலைக்காரன் கிச்சா.
பரிதியின் மனைவி ரேவதி நிறைமாத கர்பிணி. பரிதி மற்றும் ரேவதி இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். அதனால் தன் மனைவியை அருகிலிருந்து பார்த்துக்கொள்ளும் பொறுப்பு பரிதிக்கு இருக்கின்றது.
தன் மனைவியின் பிரசவத்திற்காக விடுப்பு கேட்கிறான் பரிதி. இன்ஸ்பெக்டர் கோடிலிங்கம் தன் பேத்தியின் காதுகுத்து விழா இருப்பதால் இன்று ஒரு நாள் ஸ்டேஷனை பார்த்துக்கொள். நாளை விடுப்பு எடுத்துக்கொள் என்று சொல்கிறார். ரேவதியை பக்கத்து வீட்டில் இருக்கும் சாரதாவிடம் பார்த்துகொள்ள சொல்லிவிட்டு வேலைக்கு செல்கிறான் பரிதி.
பரிதியை பார்க்க எம் எல் ஏ தம்பி வருகின்றான். எம் எல் ஏ மச்சான் செங்குட்டுவனை கண்டுபிடிக்க சொன்ன விஷயத்தை பற்றி விசாரிக்கிறான். புகார் கொடுத்து F I R பதிந்தால் கண்டு பிடிக்க நன்றாக இருக்கும் என்று சொல்கிறான். இருந்தாலும் நாங்கள் தேடிக்கொண்டுதான் இருக்கிறோம் என்று சொல்கிறான். அப்போது கணேசன் என்பவர் தன் மகள் திருமணத்திற்காக வாங்கி வைத்த 40 பவுண் நகைகளை நாங்கள் குலதெய்வம் கோயிலுக்கு போயிருக்கும் போது கொள்ளையடித்துவிட்டதாக சொல்கிறார். கணேசன் வீட்டிற்கு சென்று விசாரனையை முடித்துவிட்டு காவல் நிலையத்திற்கு வருகிறான். அப்போது ஒரு போன் வருகிறது. ஓலக்கூர் காட்டில் ஒரு பிணம் கிடப்பதாக தகவல் வருகிறது. உத்தமனுடன் பரிதியும் காட்டிற்கு சென்று பார்க்கின்றனர். அப்போது ரேவதியிடமிருந்து பரிதிக்கு போன் வருகின்றது. ஆனால் வேலையின் காரணமாக போனை கட் செய்கிறான். காட்டில் பிணம் ஒன்று கழுத்து அறுபட்டு அழுகிய நிலையில் இருக்கிறது. காது குத்துவிழாவில் இருக்கும் இன்ஸ்பெக்டரிடம் தகவல் சொல்கிறான் பரிதி. இன்ஸ்பெக்டர் நான் டி எஸ் பி யை வர சொல்கிறேன் அதோடு பிரேத பரிசோதனை அதிகாரிகளையும் வர சொல்கிறேன். நானும் கிளம்பி வருகிறேன் என்று சொல்கிறார் கோட்டிலிங்கம்.
என் பொண்ணு கல்யாண விஷயமாக அலைந்து கொண்டிருக்கிறேன் இந்த நேரம்பார்த்து இந்த கொலை என்று சலிப்புடன் வந்து பார்க்கிறார் டி எஸ் பி. பரிதியிடம் கொலையை பதிந்து விசாரனையை தொடங்க சொல்கிறார். டி எஸ் பியை அனுப்பிவிட்டு திரும்பி வந்து பார்க்கும் போது பிணத்திலிருந்த தலையை காணாமல் அதிர்ந்து போகிறான் பரிதி. அந்த காடு முழுவதும் தேட கருப்பு ஊர்மக்கள் சிலரை கூட்டிக்கொண்டு வருகிறான். அந்த நேரத்தில் ரேவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வருகிறது. பிணத்தின் தலையை தேட சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு போகிறான். அங்கே ரேவதி கீழே விழுந்து விட்டதாக சொல்லி அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். சாரதா நான் வீட்டுக்கு போய்ட்டு வந்து பார்த்த போது ரேவதி மயங்கி கிடந்ததாகவும். மருத்துவமனையில் சேர்த்ததாகவும் சொல்கிறாள். ரேவதியின் தாயும் தந்தையும் அங்கே இருக்கின்றனர். மனைவியின் பிரசவ செலவுக்கு ஒரு லட்ச ரூபாயை வங்கியில் எடுத்துவர சொல்லி கருப்புவை அனுப்புகிறான் பரிதி. இரவு முழுதும் தேடி பிணத்தின் தலையை கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. அங்கே வந்த கோட்டிலிங்கம் பரிதிக்கு போன் செய்கிறார். கையில் பணம் இருக்கா பிணத்தின் தலை காணாமல் போனதை மறைக்க மருத்துவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டுமென்று சொல்கிறான். ஒரு லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு காட்டுக்கு செல்கிறான் பரிதி. அங்கே வரும் டி எஸ் பி பரிதியை சஸ்பெண்ட் செய்ய போவதாக சொல்கிறார். ஆனால் கோட்டிலிங்கம் டி எஸ் பியிடம் பேசி ஒரு வாரத்திற்குள் தலையை கண்டு பிடிப்பதாக சொல்கிறார். பரிதியிடம் நான் டி எஸ் பியிடம் பேசி விட்டேன் சீக்கிரம் தலையை கண்டு பிடிக்குமாறு சொல்கிறார். பக்கத்து ஸ்டேஷனிலெல்லாம் காணாமல் போனவர்கள் லிஸ்ட்டை வாங்குமாறும் சொல்கிறார். போஸ்மார்ட்டம் முடிந்து பிணத்தையும் புதைத்துவிட்டு அனைவரும் செல்கின்றனர். ஆனால் பரிதியும் காண்ஸ்டபில் விவேக் பிரசன்னா மட்டும் அங்கே தலையை தேட முயலும்போது அங்கே வேட்டைக்காரர்கள் பயன்படுத்தும் டார்ச் இருப்பதை பார்க்கின்றனர். இதை ஒலக்கூரில் இருக்கும் வேட்டைகாரர்கள் தான் பயன்படுத்துவார்கள் என்று சொல்கின்றனர். இன்று ஒலக்கூரில் திருவிழா அங்கேதான் அனைவரும் இருப்பார்கள் என்று சொல்கின்றனர்.
அங்கே குற்றவாளியை தேட முயலும் போது, அங்கே ஒரு போலி சாமியாடி ஒரு இடத்தை தோண்ட சொல்லும் போது எதிர்பாரத விதமாக அங்கே ஒரு பிணம் இருக்கிறது. அந்த பிணம் எம் எல் ஏ மச்சான் செங்குட்டுவனின் பிணம் என்பதை உறுதி செய்கிறது காவல் துறை.
பக்கத்து ஸ்டேசன் தகவல்களை அடிப்படையாக கொண்டு எட்டு பேர் காணவில்லை என்று அறிந்து அனைவரின் படத்தையும் நோட்டிஸ் போர்டில் கிச்சாவை ஒட்ட சொல்கின்றனர்.
பரிதியின் மனைவி ரேவதிக்கு பெண் குழந்தை பிறக்கின்றது. ரேவதியின் தாயும் தந்தையும் அருகிலிருந்து பார்த்துக்கொள்கின்றனர்.
செங்குட்டுவன் எம் எல் ஏவின் தங்கை, கீழ் சாதியென்று தெரிந்தும் காதலித்து கல்யாணம் செய்தவன். செங்குட்டுவன் மாமாவிடம் பணம் கேட்க முயலும் போது மாமா செங்குட்டுவன் மனைவியை பற்றி தவறாக பேசிய காரணத்தால் அவரை அறிவாளால் வெட்டுகிறான். அறிவாளால் காயம் பட்ட செங்குட்டுவன் மாமா அவனை எப்படியாவது கொல்வேன் என்று சொல்கிறான். அதனால் செங்குட்டுவன் மாமாதான் கொலை செய்திருப்பார் என்று செங்குட்டுவன் மனைவி மட்டுமின்றி ஊரில் உள்ள அனைவரும் சொல்கின்றனர்.
செங்குட்டுவன் மாமா மீது சந்தேகப்படும் போலிஸ் அவர் போனை ஆராய்கிறது. அந்த போனிலிருந்து செங்குட்டுவன் வீட்டருகிலிருக்கும் பேராசிரியருக்கு போன் செய்ததை கண்டு பிடிக்கின்றனர். பேராசிரியருக்கு இரண்டு மகள்கள் இருப்பதையும் கண்டு பிடிக்கின்றனர். அதே நேரம் செங்குட்டுவன் ஒரு பெண் பித்தன் என்பதையும் கண்டுபிடிக்கின்றனர். செங்குட்டுவனின் மாமா மற்றும் பேராசிரியர் இருவரும் சேர்ந்து தான் அந்த கொலையை செய்திருப்பதாக சொல்லி கைது செய்கின்றனர்.
போலிஸ் அடித்து துவைக்கிறது செங்குட்டுவன் மாமாவிடமும் பேராசிரியரிடமும் உத்தமனும் கிச்சாவும் சேர்ந்து கொலை செய்ததாக உண்மையை ஒத்துக்கொள்ளுங்கள். பிறகு கோர்டில் அடித்ததால் தான் ஒத்துக்கொண்டதாக சொல்லுங்கள் என்று சொல்கின்றனர். இதை தெரிந்த இன்ஸ்பெக்டர் கோட்டிலிங்கமும் பரிதியும் உத்தமன் மீதும் கிச்சா மீதும் கோபப்படுகின்றனர். உத்தமனை பரிதி திட்டுகிறார். கிச்சாவை அடித்து நீ ஒரு வேலைக்காரன், என்ன போலிஸ்காரன் நினைப்பா என்று ஸ்டேசனைவிட்டு விரட்டுகின்றனர்.
கிச்சா போலிஸிற்கு போன் செய்கிறான். அப்போது அவன் வீட்டருகில் திருட சில திருடர்கள் நோட்டமிடுவதாக சொல்கிறான். பரிதி திருடர்களை கைது செய்கிறான். கிச்சா தன் மகளுடன் அங்கே நிற்கிறான். கிச்சாவின் மகளிடம் அவள் பெயரை கேட்கிறான். ரேவதி என்று சொல்கிறாள். அவள் அம்மாவை பற்றி கேட்கிறான். ஆனால் அவள் இறந்துவிட்டதாகவும் தான்தான் அவளை வளர்ப்பதாகவும் சொல்கிறான்.
தொலைந்து போன செங்குட்டுவன் போனை எண்ணைவைத்து I M E I நம்பர் மூலம் அவன் போனில் மற்றொரு சிம் கார்ட் பயன்படுத்தப்படத்தை கண்டு பிடிக்கின்றனர். அந்த சிம் கார்ட் முருகன் என்பவன் பேரில் இருப்பதாகவும் கண்டுபிடிக்கின்றனர். அந்த நம்பரிலிருந்து மூன்று நம்பர்களுக்கு தொடர்ந்து போன் சென்றிருப்பதாக கண்டு பிடிக்கின்றனர். மீனாக்ஷி என்பது ஒரு எண் அது அவன் காதலியாக இருக்கலாம் ரொம்ப நேரம் பேசியிருப்பதாக கண்டுபிடித்தனர். இன்னொன்று அவன் தாய் நம்பர் என்றும். அடுத்து ஒரு நம்பர் பாண்டி என்பவனுடையது என்றும் கண்டுபிடிக்கின்றனர். பாண்டி மீது சந்தேகப்படுகின்றனர். பாண்டி, செங்குட்டுவன் கிராமத்தை சேர்தவன் என்பதையும் கண்டுபிடிக்கின்றனர். முருகன் பெயரில் சிம் கார்ட், பாண்டி என்பவனுடன் பேசியது என்பதை வைத்து விசாரனையை தொடங்குகின்றனர்.
அந்த பாண்டியை தேடி போலிஸ் செல்கிறது. பாண்டி போனில் இருந்து முருகனுக்கு போன் செய்து அவனை தேடி செல்கின்றனர். அவன் கிச்சா வீட்டிலிருப்பதை கண்டு பிடிக்கின்றனர். கிச்சாவிடம் இவன் யார் இவன் எப்படி உன் வீட்டிற்கு வந்தான் என்று கேட்கிறான். நானும் அவனும் நண்பர்கள் இரவு குடிப்பதற்கு அடிக்கடி வருவான். சில நாட்கள் இங்கேயே படுத்துவிடுவான் என்று சொல்கிறான். நீ இன்னொரு போனில் இந்த சிம்மை போட்டு பேசியுள்ளாய். அந்த போன் எங்கே என்று கேட்கின்றனர். தான் கிச்சாவின் போனில் தான் தன் சிம் கார்டை போட்டு பேசியதாக சொல்கிறான். கிச்சா வீட்டில் தேடும் போது இறந்து போன செங்குட்டுவன் போனை கைப்பற்றுகின்றது போலீஸ்.
கிச்சாவை போலிஸ் கைது செய்கிறது. காண்ஸ்டபில் கருப்பு, போலிஸிடம் உன்னிடம் போனே இல்லையென்று சொன்னாய் இறந்து போன செங்குட்டுவன் போன் உன்னிடம் எப்படி வந்தது. நீ தான் செங்குட்டுவனை கொலை செய்தாயா என்று அடித்து துவைக்கிறான். அப்போது அங்கே வரும் பரிதி என்ன கருப்பு எல்லா கைதியையும் விசாரிப்பது போல் கிச்சாவையும் விசாரிக்கிறாய். கிச்சா நான்காண்டுகளாக நம் ஸ்டேசனில் வேலை செய்துள்ளான் அவனை பற்றி உனக்கு தெரியாதா ஏன் இப்படி காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்கிறாய் என்று கேட்கிறான். அப்போது அங்கே வரும் இன்ஸ்பெக்டர் கோட்டிலிங்கம் கிச்சாவிடம் நீ உண்மையை சொன்னால் தான் உன்னை காப்பாற்ற முடியும் என்று சொல்கிறான்.
அது என்னோட போன் இல்லை என் மகள் மொபைல் போன் கேட்டாள். புது போன் வாங்க என்னிடம் பணம் இல்லை. நான் பாரில் குடிக்கும் போது ஒரு மெகா குடிகாரன் இந்த போனை தன்னிடம் குறைந்த விலைக்கு விற்றதாக கிச்சா சொல்கிறான். இந்த போன் தன் மகளுக்காக வாங்கியது என்று சொல்கிறான். இதை நீ ஏன் முன்பே நீ சொல்லவில்லை என்று பரிதி கேட்கிறான். நீங்கள் போனை தேட வந்த போதுதான் அது திருட்டு போன் என்று தெரிந்தது. அதனால் எங்கே எனக்கு பிரச்சனை வந்துவிடுமோ என்ற பயத்தில்தான் போன் இல்லை என்று மறைத்தேன் என்று சொல்கிறான் கிச்சா. போனை விற்றவனை பாரின் அருகிலிருக்கும் CCTV மூலம் கண்டு பிடிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் போனை விற்றவனை கண்டு பிடிக்க முடியவில்லை.
அப்போது தன் மகளின் கல்யாணத்திற்காக வைத்திருந்த நகையை பறிகொடுத்த கணேசன் பரிதியை பார்க்கிறார். இன்னும் சில நாட்களில் கல்யாணம் இந்த நகை கிடைக்காமல் போனால் குடும்ப மானமே பறிபோகும் என்று அழுகின்றார்.
கிச்சா தகவல் அடிப்படையில் கைது செய்யப்பட்ட திருடர்களை அடித்து துவைக்கின்றனர். அப்போது ஒரு திருடன் தான் கொள்ளையடித்ததை ஒத்துக்கொள்கிறான். அதுமட்டுமின்றி திருட்டு நகைகள் வாங்கும் நகைக்கடையும் சொல்கிறான். நகைக்கடை சேட்டை கைது செய்து அவரை அடித்து துவைத்து அவன் வாங்கிய திருட்டு நகைகளை கைப்பற்றுகின்றனர். அந்த நகையிலிருந்து 25 பவுன் நகைகளை மீட்கின்றனர். அந்த நகைகளில் கணேசனின் நகைகள் இல்லை. இருந்தாலும் கணேசனின் நிலைமையை எடுத்து சொல்லி பரிதி இண்ஸ்பெக்டரிடம் பேசி மீட்ட நகைகளை கணேசனிடம் ஒப்படைக்கின்றனர். மீட்ட நகைகளை எடை போடும் போது அதில் கொலையான செங்குட்டுவன் கழுத்திலிருந்த செயினும் இருக்கின்றது. இதை பார்த்து அதிர்ச்சியான போலிஸ் நகைக்கடை சேட்டையும் திருடர்களையும் அடித்து உதைக்கிறது. இந்த நகையை யார் விற்றார்கள் யார் திருடினார்கள் என்று கேட்கின்றனர். அப்போது கிச்சாவிடம் சொல்லி கைதிகளுக்கு டீ வாங்கி கொடுக்க சொல்கிறான் பரிதி. கைதிகளுக்கு டீ வாங்கி கொடுக்கும் போது நகைக்கடை சேட்டிற்கும் கொடுக்கிறான். அவனைப்பார்த்த நகைக்கடை சேட் போலிஸிடம் தன்னிடம் அந்த நகையை விற்றது இந்த கிச்சா தான் என்று சொல்கிறான். கிச்சானை அடித்து உதைத்தும் நகைக்கடை CCTV மூலமும் கிச்சான் தான் செயினை விற்றான் என்பதை உறுதி செய்கின்றனர். இந்த நகை எப்படி கிடைத்தது என்று கிச்சாவை அடித்து விசாரிக்கின்றனர். இந்த நகை கீழே கிடந்தது அதைத்தான் நான் விற்றேன் என்று சொல்கிறான். ஆனால் நம்பாமல் விசாரணையை அவனை சுற்றி தொடங்குகின்றனர்.
கிச்சாவை பற்றி விசாரிக்கின்றனர். கிச்சாவின் தம்பி ஒரு பெண்ணை காதலித்ததாகவும் அவன் தம்பி அவளை கல்யாணம் செய்து கொள்ளும்முன்பே ஒரு விபத்தில் இறந்து விட்டான். அவள் மிகவும் அழகானவள் அவள் பெயர் செல்வி. தன் தம்பி இறந்த காரணத்தால் கிச்சா அவளை திருமணம் செய்துகொண்டான்.. அவர்களுக்கு ஒரு மகள் ரேவதி மூன்றாம் வகுப்பு படிக்கிறாள். செல்வியின் தங்கையுடன் கிச்சா தொடர்பு வைத்திருந்தான். அதனால் சில மாதங்களுக்கு முன் அவன் மனைவி வேறொருவனுடன் ஓடிவிட்டாள் என்று தகவல் இருப்பதாகவும், கிச்சாவின் மீது இது வரை எந்த வழக்கும் இல்லை என்றும் கண்டுபிடிக்கின்றனர்.
கருப்பு கிச்சாவை அரை நிர்வாண கோலத்தில் அடித்து உதைக்கிறான். கிச்சாவின் மகள் தன் பாட்டி, மனைவியின் தங்கை கிச்சாவை காண போலிஸ் ஸ்டேஷனுக்கு வருகின்றனர். அவனை இதே கோலத்தில் அவர்கள் முன் அடித்தால் உண்மையை சொல்வான் என்று அழைத்து செல்ல முயல்கின்றான் கருப்பு.
பரிதியும், கோட்டிலிங்கமும் நீ உண்மையை சொன்னால் உன்னை இந்த கோலத்தில் அவர்கள் முன் நிறுத்த மாட்டேன் என்று சொல்கின்றனர். அவனும் நடந்ததை சொல்கிறான். ஒரு நாள் செங்குட்டுவனை வழியில் பார்த்தேன் நான் அவனை என் வீட்டுக்கு டீ சாப்பிட கூட்டிவந்தேன். வீட்டில் பால் இல்லை என்ற காரணத்தால் பால்வாங்க வெளியில் சென்று வீடு திரும்பிய போது என் மனைவி செல்வியிடம் செங்குட்டுவன் தவறாக நடக்க முயன்றதை பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். அவனை திட்டி அனுப்பினேன், ஆனால் அடுத்த நாள் எனக்கு பாரில் சரக்கு வாங்கி கொடுத்து முதலில் மன்னிப்புக்கேட்டவன். பின் என் மனைவியின் அழகை அசிங்கமாகவும் எனக்கு எப்படி இவ்வளவு அழகான மனைவி கிடைத்தாள் என்றும் பேசினான். அதை பொருக்க முடியாமல் அவனை கொன்று புதைத்தேன் அவன் நகையையும் செல்போனையும் எடுத்துக்கொண்டேன் என்று வாக்குமூலம் கொடுக்கிறான் கிச்சா.
கிச்சாவின் செல் நம்பரின் மூலம் விசாரனை மேற்கொண்ட போது அவன் போனிலிருந்த M H L தொழிற்சாலை ஊழியர் கார்த்திக் நம்பருக்கு அடிக்கடி பேசியுள்ளதை கண்டு பிடிக்கின்றனர். கார்த்திக்கை அழைத்து விசாரிக்கும்போது அவன் சொன்ன தகவல் போலிஸை அதிர்ச்சியடைய வைக்கிறது. கார்த்திக் கிச்சாவின் மனைவி பேரழகி எப்படியாவது அவளை அடைய வேண்டுமென்று அவன் வீட்டையே சுற்றி சுற்றி வருவேன். இதை கிச்சானும் பார்த்து என்ன சார் இங்கேயே சுற்றிக்கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் M H L தொழிலாளி தானே என்று கேட்கிறான். ஆமாம் இங்கே வீடு எதாவது கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டிருப்பதாக சொன்னேன். கிச்சா தன் மனைவி நன்றாக டீ போடுவாள் வந்து டீ சாப்பிட்டு விட்டு போகுமாறு சொன்னான் நானும் இதுதான் வாய்ப்பு என்று வீட்டிற்கு போனேன். அங்கே டீ போட பால் இல்லையென்று கிச்சா வாங்க சென்றான். கிச்சாவின் மனைவி மோகத்துடன் தன்னை கட்டிபிடிக்க வரும் போது கிச்சா வந்துவிட்டான். அழுது துடித்தான். அவன் பையில் பணத்தை வைத்துவிட்டு நானும் ஓடிவிட்டேன். ஆனால் அடிக்கடி போன் செய்து பணம் கேட்பான் பணம் கொடுக்காவிட்டால் உன் மானத்தை வாங்கிவிடுவேன் என்று சொல்வான். நானும் வேறுவழியில்லாமல் பணம் கொடுப்பேன். என் மனைவி நகையை கூட கொடுத்துள்ளேன் என்று சொல்கிறான் கார்த்திக். கார்த்திக்கிடம் இதே போல் உங்கள் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருக்கின்றனரா?. இருந்தால் சொல்ல சொல்லுங்கள் என்று சொல்கிறான். அலுவலக துணை பொறியாளரும் இதே முறையில் ஏமாந்துள்ளதாக சொல்கிறான். அவனை விசாரிக்கும் போது கார்த்திக் சொன்ன அதே நிகழ்வை இவனும் சொல்கிறான். டீ சாப்பிட கூப்பிட்டதாகவும் பால் வாங்கி திரும்பி வந்தவன் மனைவியுடன் இருப்பதை பார்த்து புலம்பியதாகவும் தன்னையும் மிரட்டி பணம் வாங்கியதாகவும் சொல்கிறார். சரி வேறு யாராவது பாதிக்கப்பட்டர்களா என்று அவனிடம் கேட்கிறான். இதே போல் ஏராளமானவர்களை கிச்சா தன் மனைவியின் அழகை பயன்படுத்தி மிரட்டி பணம் பறித்ததை கண்டு பரிதி மட்டுமின்றி அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர்.
இன்ஸ்பெக்ட கோட்டிலிங்கம் கிச்சாவை விசாரித்து அவன் ஏமாற்றிய பணம் நகைகளை மீட்குமாறு பரிதியிடம் சொல்கிறார். கிச்சாவை பரிதி கூப்பிட்டு டீ வாங்கிவருமாறு சொல்கிறான், ஒரு கொலை கைதியை டீ வாங்கிவர சொல்லும் பரிதியை பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். இவன் தப்பி ஓடிவிடுவான் என்று நினைக்கும் போது அவன் டீ வாங்கி வந்து கொடுக்கிறான். அனைத்து போலிஸ் அதிகாரிகளையும் கிச்சாவை முன்பு போலவே நடத்துங்கள் என்று பரிதி சொல்கிறான்.
கிச்சாவிடம் பரிதி நான் F I R எழுத போகிறேன் நீ வேறெதாவது தப்பு செய்திருந்தாலும் சொல் ஒரே F I R போட்டால் தண்டனை குறையும். அதுவே தனித்தனியாக போட்டால் தனித்தனி வழக்காக தண்டனை அதிகமாகும். ஏதாவது மாற்றி எழுத வேண்டுமென்றால் சொல்லுங்கள் என்று சொல்கிறான். நாளைக்குதான் எழுதப்போறேன் இரவு முழுவதும் யோசித்து சொல் என்று சொல்கிறான். கருப்பு நான் வீட்டுக்கு போறேன் கிச்சா எதாவது சொன்னால் என்னை கூப்பிடு என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு செல்கிறான். நல்லிரவில் கருப்பு பரிதிக்கு போன் செய்து கிச்சா உன்னிடம் பேச வேண்டுமென்று சொல்கிறான் என்று சொல்கிறான். நகை பணத்தை எங்கே வைத்துள்ளான் என்று சொல்வான் என்ற எதிர்பார்ப்பில் கிச்சாவை சந்திக்க போகிறான். கிச்சாவிடம் தனியாக பேசும் பரிதியிடம் கிச்சா, நான் ஒரு தப்பு பண்ணிட்டேன் சார் சூரியூரை சேர்ந்த தற்கொலை செய்து கொண்ட முருகேசன் மனைவி விதவை சரோஜாவை வைத்துள்ளேன் என்று சொல்கிறான். இதிலென்ன தவறு இருக்கின்றது நீயும் துணையில்லாமல் இருக்கிறாய். அவளும் துணையில்லாமல் இருக்கிறாள் சிறை தண்டனை முடிந்து வந்து கல்யாணம் செய்துகொள் என்று பரிதி சொல்கிறான். கிச்சாவோ முருகேசன் தற்கொலை செய்துகொள்ளவில்லை நானும் சரோஜாவும் உல்லாசமாக இருந்த போது முருகேசன் பார்த்துவிட்டான். அவனை நான் தான் சரோஜா சம்மதத்துடன் கிணற்றில் தள்ளி கொன்றேன் என்று கிச்சா சொல்ல பரிதி அதிர்ச்சியாகிறான்.
அடுத்த நாள் பரிதி F I R எழுத முயலும் போது கிச்சா பரிதியை கூப்பிடுகின்றான். தனியாக பேச வேண்டுமென்று சொல்கிறான். நான் ரெண்டு கொலை பண்ணலை மூணு கொலை பண்ணியிருக்கேன் என்று சொல்கிறான். இரண்டு கொலையில்லையாம் மூணு கொலை என்ற செய்தியை கேட்டு இண்ஸ்பெக்டர் முதல் அனைவரும் அதிர்ச்சியாகின்றனர். பரிதி கிச்சாவிடம் முதல் இரண்டு கொலையா மூணு கொலையா என்று கேட்கிறான். இரண்டும் வேணாம் மூணும் வேணாம் சார் நாலு கொலையா போட்டுக்கங்க என்று சொல்கிறான். பரிதி கிச்சாவிடம் மூணா நாலா யோசிச்சு சொல்லு என்று கூறிவிட்டு தகவலை இன்ஸ்பெக்டரிடம் சொல்ல இன்ஸ்பெக்கடர் மயக்கமாகிறார். மீண்டும் கிச்சாவை சந்திக்கும் போது காணாமல் போனவர்கள் பட்டியலில் இருக்க்கும் அனைவரையும் தான் தான் கொலை செய்ததாக சொல்கிறான்.
இந்த செய்தியை கேள்விபட்டு A D S P நேரடியாக ஸ்டேஷனுக்கு வருகிறார். அந்த நேரம் வீட்டிற்கு மனைவிக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு திரும்பிய பரிதியை கிச்சாவுடன் பார்த்து கோபம் கொள்கிறார். ஸ்டேஷனை வீட்டு வெளியே போக சொல்கிறார் A D S P. கிச்சாவை அடித்து உதைக்கின்றனர். A D S P யிடம் கிச்சா நான் எந்த கொலையையும் செய்யவில்லை அடிதாங்க முடியாமல் ஒத்துக்கொண்டதாக சொல்கிறான்.
இதற்கிடையே தலையை கொய்யப்பட்ட பிணத்தை கொலை செய்தது கிச்சா தான் என்றும் அந்த தலை அவனிடம் தான் இருக்கிறது என்றும் பரிதி D S P யிடம் சொல்வதை ஒருவன் கேட்கிறான். இந்த தகவல் மீடியாவில் கசிந்து பரிதி சஸ்பெண்ட் செய்யப்படுகிறான்.
கிச்சாவிடம் பரிதி பாணியில் அவன் போக்கிலேயே விசாரித்து உண்மையை வாங்க முயல்கின்றார்கள் D S P மற்றும் இண்ஸ்பெக்டர். ஆனால் அவர்களிடமிருந்து வாய்ப்பை பயன்படுத்தி தப்பி ஓட முயலும் கிச்சாவை பிடித்துவிடுகின்றனர். பரிதியால் மட்டுமே அவனிடமிருந்து உண்மையை வாங்க முடியும் என்று முடிவு செய்து அவனை வரச்சொல்கின்றனர். பரிதி ஸ்டேஷனுக்கு வரும்போது கட்டிவைத்து அடித்து துவைக்கப்பட்ட நிலையிலிருந்த கிச்சாவை விடுவிக்க சொல்லி உடையணியவைத்து மருத்துவமனைக்கு கூட்டி போகிறான். அங்கிருந்து அவனை கூட்டிக்கொண்டு அவன் வீட்டிற்கு சென்று மகளை பார்த்துவிட்டு வரச்சொல்கிறான். வீட்டைவிட்டு வெளியில் வரும் கிச்சா ஓடாமல் பரிதிக்காக நிற்கிறான். பரிதியிடம் கிச்சா, தான் சிறைக்கு சென்றாலும் தன் மகளை பார்த்துக்கொள்ளுமாறு சொல்கிறான். கிச்சாவிடம் பரிதி தன் கனவு இந்த போலிஸ் வேலை, இன்று அதுவே இல்லாமல் போவது கஷ்டமாக இருக்கிறது என்று புலம்புகிறான். கிச்சா தான் கொன்ற அனைத்து பிணத்தையும் காண்பிப்பதாக சொல்கிறான். அனைத்து பிணத்தையும் தோண்டியெடுத்து அவன் மீது F I R போட்டு போலிஸ் அவனை கஸ்டடியில் எடுக்கிறது. ஆனால் தலையை பற்றி மட்டும் சொல்லாமல் சிறைக்கு போகிறான். சிறையில் இருக்கும் கைதிகள் நீ உண்மையை ஏன் சொன்னாய் என்று கேட்கின்றனர். நான் எங்கே முழு உண்மையை சொன்னேன். அந்த பரிதி முட்டாள் நான் சிறைக்கு வந்தாலும் என் மகளை நன்றாக பார்த்துக்கொள்ள ஒரு கதையை திரித்துவிட்டதாக சொல்கிறான்.
என் மனைவி அழகானவள் நானோ பெரிய அளவு சம்பாதிக்க முடியாதவன். என்னிடம் கேவலமான வேலைகளை வாங்கிகொண்டு குறைந்த வருமானத்தை கொடுத்தவன். என் மனைவியின் அழகை மூலதனமாக வைத்து சம்பாதிக்க முடிவு செய்தேன். நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் எவனோ ஒருவனுடன் செட்டிலாக என்னைவிட்டு அவள் ஓடிவிட்டாள். எனக்கு பணம் தேவை என் மகளை பெரியாளாக்க வேண்டும். பணத்தாசை கொண்ட மனிதர்களை ஏமாற்ற நினைத்தேன். புதையலை எடுத்து கொடுப்பதாக சொல்லி ஏமாற்றி பணம் பறித்து பூஜை செய்ய வேண்டுமென்று ஏமாற்றி அனைவரையும் கொன்று நகைகளை அபகரித்ததாக சொல்கிறான்.
பிணத்திற்கு தலையில்லையென்றால் கொலையாளி என்று நிரூபிக்க முடியாது என்ற காரணத்தால் தலையை திருடி எடுத்து செல்லும்போது விபத்தில் தலை கீழே விழுந்து விட்டது. நான் கொன்று கோவில் அருகிலேயே செங்குட்டுவன் பிணத்தை புதைத்தேன். அந்த பிணத்தை எடுத்த போதே நான் மாட்டிக்கொண்டேன் என்று நினைத்தேன். அதற்காக செங்குட்டுவன் மாமாவிடம் கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க செய்தேன். மொபைல் போன் மாட்டிக்கொண்ட போது அதை திசை திருப்ப பாரில் ஒருவனிடம் வாங்கியதாக சொல்லி நம்பவைத்தேன். நான் மாட்டிக்கொண்டது என்னால்தான். நான் சில திருடர்களை பிடிக்க உதவினேன் நல்ல பெயர் எடுக்க. அவர்கள் மூலம் நகைக்கடை சேட் மாட்டிக்கொண்டான். அவன் மூலம் நான் மாட்டிக்கொண்டேன். இனி தப்பமுடியாது என்று தெரிந்து அப்ரூவராக மாறினேன். என் மகளுக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும். பரிதியின் குணத்தை பயன்படுத்திக்கொண்டேன்.
பரிதி போலிஸ் நிலையத்திலிருந்து கிச்சாவை அழைத்து சென்று தலையை மீட்டு கொடுக்கிறான். கிச்சாவிற்கு சிறை தண்டனை கிடைக்கிறது.
பரிதியும் கருப்பும் ஓரு பேக்கரியில் பிறந்த நாள் கேக் வாங்குகின்றனர். ரேவதி என்று பெயர் எழுத சொல்கிறான். கருப்பு என்ன பொண்டாட்டிக்கா என்று கேட்கிறான். ஆனால் பரிதி இது மனைவி ரேவதிக்கல்ல கிச்சாவின் மகள் ரேவதிக்கு என்று சொல்கிறான். கருப்பு பரிதியிடம் அந்த கிச்சா உங்கள் ஏமாளித்தனத்தை பயன்படுத்தி தன் பெண்ணை உங்கள் தலையில் கட்டிவிட்டான் என்று சொல்கிறான். பரிதி அவன் ஏமாளியாக நினைத்தாலும் கிச்சா வேண்டுமானால் விலங்காக இருக்கலாம் ரேவதியும் ஒரு மனுஷிதானே என்று சொல்கிறான்.
பாராட்டுக்குறியவை.:
புலனாய்வு அடிப்படையிலான கதையில் எதிர்பாரத திருப்பங்களை கொடுத்துள்ளனர். வித்தியாசமான அடிப்படையிலான குற்ற பின்னனியை அமைத்துள்ளனர். போலிஸ் புலனாய்வை சினிமாத்தனமின்றி எதார்த்தமாக கொடுத்துள்ளனர்.
சீரியசாக சென்று கொண்டிருக்கும் புலனாய்வு வித்தியாசமான கோணத்திற்கு திசை திரும்புகிறது. ஆனால் அதை சீரியசான கோணத்திலிருந்து ஒரு நகைச்சுவை அடிப்படையிலான கோணத்திற்கு நகர்வது புதுமையான ஒன்றாக இருக்கின்றது.
இயக்குனர் மிக அழகாக கதையையும், திரைக்கதையையும் அமைத்துள்ளார்.
நடிகர் விமல் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான இன்ஸ்பெக்டர் பரிதி கதாப்பாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார். இதுவரை அவர் நடித்துள்ள படங்களிலிருந்து முற்றிலும் மாறுப்பட்ட பண்பட்ட நடிப்பாக உள்ளது.
பாலசரவணன் இதுவரை நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தது. இந்த படத்தில் சீரியஸ் காண்ஸ்டெபிலாக அருமையாக நடித்துள்ளார்.
கிச்சா கதாப்பாத்திரத்தில் ரவி மிகவும் அருமையாக எதார்த்தமாக அப்பாவியான புத்திசாலித்தனமான கதாப்பாத்திரத்தில் அருமையாக பொருந்தி நடித்துள்ளார்.
ரேஷ்மா பசுபுலேட்டி செல்வி கதாப்பாத்திரம் சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் புதுமையான பாத்திரப்படைப்பாக அமைந்துள்ளது.
தமிழில் எத்தனையோ புலனாய்வு படங்கள் வந்திருந்தாலும் அவைகள் அனைத்திலிருந்து முற்றும் மாறுபட்டதாக இருக்கின்றது.
நெருடலானவை.:
ATM கார்டை கொடுத்து ஒரு லட்சம் ரூபாயை எடுத்து வருமாறு சொல்கின்றனர். ATM மூலம் ஒரு லட்சம் எடுக்க முடியுமா?
பிணத்தின் தலை காணமல் போகின்றது. தலையை எடுத்து செல்லும் போது அது தவறி விழுகிறது. ஆனால் பல நாட்களுக்கு பின் அந்த தலையை மீட்பது என்பதில் லாஜிக் இல்லாமல் இருக்கிறது. தலை விழுந்த இடத்திலேயே இருக்குமா?. பறவைகள் நாய் போன்றவை இழுத்து சென்றிருக்காதா?.
கதையின் முக்கிய தொடக்கம் செங்குட்டுவன் மரணம். செங்குட்டுவன் கொலை கிச்சாவின் மனைவி அவனைவிட்டு சென்றவுடன் நடந்ததா?. இல்லை செங்குட்டுவன் மரணம் நிகழ்ந்த பின் கிச்சாவின் மனைவி அவனைவிட்டு சென்றாரா?. மரணத்தின் கால இடைவெளி குழப்பத்தை ஏற்படுத்துகின்றது.
கிச்சா ஏமாற்றி கொலை செய்து பணத்தை நகையை கொள்ளையடிக்க காரணம் என்ன? அவற்றை என்ன செய்தார்?.
ஒரு கொலைப்பழியில் மாட்டிக்கொண்ட கிச்சா அனைத்து கொலைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக ஒத்துக்கொள்வது நகைச்சுவையாக இருந்தாலும். ஏன் அனைத்து கொலைகளையும் ஒத்துக்கொண்டு சிறைக்கு செல்கிறான்? என்பது லாஜிக் மீறல்.
பிணத்தின் தலை கிடைக்காவிட்டால் தனக்கு தண்டனை கிடைக்காது என்று எண்ணும் கிச்சா. பரிதியை ஏமாற்ற வேண்டுமென்று நினைத்த கிச்சா தலையைப்பற்றி ஏன் பரிதியிடம் சொல்கிறான்?.
நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்திருக்கும் இனியாவின் ரேவதி கதாப்பாத்திரம் ஒரு கதாநாயகி வேண்டும் என்று ஒப்புக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
வெப் சீரிஸிற்கு சென்சார் என்பது கிடையாது. ஆனால் அதற்காக ஆபாச வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அதிகம் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கின்றனர்.
தொகுப்பு.:
விலங்கு திரைப்படம் சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் அவைகளையெல்லாம் தாண்டி வித்தியாசமான புலனாய்வு வெப் சீரிஸ். எதிர்பாராத திருப்பங்கள் வித்தியாசமான காமெடி ட்விஸ்ட் நிறைந்தது. மொத்தத்தில் விலங்கு விலக்கப்பட வேண்டியதல்ல விருப்பப்பட வேண்டியது. சபாஷ் பிரசாந்த் பாண்டிராஜ்.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.