சலார் பகுதி-1 Ceasefire
கே.ஜி.எஃப் இரண்டு பாகங்களையும் இயக்கி தென்னிந்திய சினிமாவின் பக்கம் ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் பிரசாந்த நீல். மற்றும் பாகுபலி பிரமாண்ட வெற்றிக்கு பின் தோல்விகளையே சந்தித்து வந்த பிரபாஸூம் இணைந்துள்ள படம் சலார். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா?.
ஹோம்பலே ஃபிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ள படம் சலார் பகுதி-1 Ceasefire. இப்படத்தை கே.ஜி.எஃப் புகழ் பிரசாந் நீல் இயக்கியுள்ளார். ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்துள்ளார். உஜ்வல் குல்கர்னி படத்தை தொகுத்துள்ளார். மேற்குறிப்பிட்ட அனைவருமே கே.ஜி.எஃப் படத்தில் ஒன்றாக பயணித்தவர்களே.
சலார் பகுதி-1 Ceasefire படத்தில் பிரபாஸ் தேவா கதாப்பாத்திரத்திலும், பிருத்விராஜ் சுகுமாரன் வர்தா என்னும் வர்தராஜ மன்னார் கதாப்பாத்திரத்திலும், ஸ்ருதிஹாசன் ஆத்யா கதாப்பாத்திரத்திலும், ஜெகபதிபாபு ராஜ மன்னார் கதாப்பாத்திரத்திலும், ஸ்ரீயா ரெட்டி ராதா ராஜமன்னார் கதாப்பாத்திரத்திலும், பாபி சிம்ஹா பாராவா கதாப்பாத்திரத்திலும் ஈஸ்வரி ராவ் தேவாவின் தாய் கதாப்பாத்திரத்திலும், கே.ஜி.எஃப் பட புகழ் ராமாசந்திர ராஜூ ருத்ரா கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர். இவர்களுடன் ரமணா, டினு ஆனந்த், பிரமோத், ஜான் விஜய், மைம் கோபி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதைக்கரு: மண்ணாசை, பெண்னாசை, பொன்னாசை இவைகள் தான் பல சரித்திரங்களின் பின்னனியில் உள்ளது. அதை அடிப்படையாக கொண்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கும் நபர்கள். அவர்களிடையே நிலவும் வன்முறை ராஜ தந்திர நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை இயக்கியுள்ளனர்.
கதை: காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலை பெற்றாலும் இந்தியாவுடன் இணையாமல் தங்களுக்கென தனி சட்ட திட்டங்களை உருவாக்கி யாருக்கும் அஞ்சாமல் இருக்கும் நாடு கான்சார். கொள்ளையடிப்பதையே தொழிலாக கொண்ட பல பிரிவினர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியது தான் கான்சார். கான்சார் நாட்டின் அரசர் ராஜமன்னார். இவர் அனைத்து பிரிவுகளையும் அழித்து தனியாக ஆட்சி செய்ய நினைப்பவர். இவரின் இரண்டாவது மனைவியின் மகன் வர்தராஜ மன்னார். தேவாவும் வர்ராஜ மன்னாரும் சிறுவயது நண்பர்கள். தன்னை நிலைநிறுத்திக்கொள்ள சௌரியங்க குலத்தில் உள்ள அனைவரையும் அழிக்க ராஜமன்னார் உத்தரவிடுகிறார். அதில் தேவாவும் அவர் தாயும் பாதிக்கப்படும் சூழலில். தன் உரிமையை விட்டுக்கொடுத்து தேவாவையும் அவர் தாயையும் காப்பாற்றுகிறான் வர்தராஜ மன்னார். பின் அங்கிருந்து தேவாவும் அவன் தாயும் வெளியேறுகின்றனர். தேவா மீண்டும் இங்கே வருவதாக இருந்தால் நண்பன் வர்தா மன்னாருக்காக மட்டும் வருவதாக சத்தியம் செய்கின்றான்.
வளர்ந்து பெரியவனான தேவா ஒரு சூழலில் எந்த வன்முறையிலும் ஈடுபடமாட்டேன் என்று தாய்க்கு சத்தியம் செய்கின்றான். இந்த சூழலில் ஆத்யாவை ராஜ மன்னாரின் முதல் மனைவியின் மகள் ராதா மன்னாரிடமிருந்து ஒரு பிரச்சனையிலிருந்து காப்பாற்ற தன் தாயிடம் அடைகலம் புக செய்கின்றான். ஆனால் ராதா மன்னார் ஆட்கள் ஆத்யா இருப்பிடம் தெரிந்து அவளை கொண்டுவர செல்கின்றனர். ஒரு கட்டத்தில் தேவாவின் தாய் தன் சத்தியத்தை திரும்பபெற்று ஆத்யவை காப்பாற்ற சொல்கிறார். ஆத்யாவை கடத்தி செல்பவர்கள் கைகளில் ஒரு குறியீடு போடுகின்றனர். அந்த குறியீடு இருக்கும் அனைத்து பொருள்களும் கான்சார் நாட்டுக்கு சொந்தமானவை. அதை எந்த அரசும் தடுக்கக்கூடாது. அதையும் மீறி தேவா ஆத்யாவை காப்பாற்றுகிறான். அப்போது தான் தெரிகிறது இந்த குறீயிட்டை உருவாக்கியதே கான்சார் நாட்டின் சலாரான தேவா தான். வர்த ராஜா மன்னார் அரசாட்சியில் அவருக்கு எதிராக அவரின் சலாரே (தேவா) நடந்து கொள்வது மிகப்பெரிய பின் விளைவை உருவாக்கும் என்று ராதா மன்னார் சொல்கிறார். அப்போது தேவாவின் நண்பர் பிலால் வர்தா மன்னார் எப்படி அரசரானர்?. தேவா எப்படி சலாரானர் என்று ஆத்யாவிடம் சொல்கின்றார்.
வர்தா மன்னார் தன் நண்பனின் தாயை காப்பாற்ற சிறுவயதில் விட்டுக்கொடுத்த உரிமை காரணமாக பல வருடங்கள் அரசின் நிர்வாக உறுப்பினாரக இல்லாமல் இருக்கின்றார். ராஜ மன்னார் அந்த விட்டு கொடுத்தல் முறையற்றது அதனால் அதன் மூலம் பயனடைந்த ரங்காவை பதவி விலக சொல்கிறார். சௌரியங்கா வம்சத்தை சேர்ந்த பைரவா. ராஜமன்னார் முதல் மனைவி மகன் ருத்ரா மகள் ராதா மற்றும் பிற உறுப்பினர்கள் Ceasefire வாக்கெடுப்பு அரசியல் சதுரங்கத்தை ஆடுகின்றனர். ஒவ்வொருவரும் மிகப்பெரிய படைகளை திரட்டி ஒருவரை ஒருவர் அழிக்க திட்டமிடுகின்றனர். ஆனால் வர்தா மன்னார் தனக்கு துனையாக நண்பன் தேவா என்ற தனி ஒரு நபரை மட்டுமே சேர்க்கின்றான். ஒன் மேன் ஆர்மியாக அவர்களை அழித்து சலாராக மாறினார் என்று சொல்கின்றார். தேவா எப்படி சலாராக மாறினார். வர்தா மன்னாரும் சலாரும் ஒருவருக்கொருவர் எப்படி எதிரிகளாக மாறினர் அதில் யார் வெற்றி பெற போகின்றன்றனர். தன் சௌரியங்கா சமூகத்தை அழித்த அழித்த மன்னார் குடும்பத்தை எப்படி கருவருக்க போகிறார் சலார் தேவா என்பதை அடுத்த பாகத்தில் இயக்குனர் சொல்வார் என்ற எதிர்பார்ப்புடன் படம் முடிவடைகின்றது.
பாராட்டுக்குறியது:
கன்னடத்தில் 2014 ல் வெளியான உக்கிரம் படத்தின் தழுவலில் இந்த படத்தை எடுத்திருந்தாலும் கதைக்களத்தை வித்தியாசமாக வடிமைத்துள்ளார் இயக்குனர்.
ஒரு புதுவித வித்தியாசமான அரசியல் களத்தை அமைத்து திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர்
கான்சார் நகரம் என்ற நகரத்தை வடிமைத்து அதை கதைக்களமாக்கி அதை அனைவரும் ரசிக்கும் படி கொடுத்துள்ளார் கலை இயக்குனர்.
சண்டைக்காட்சிகளில் பிரமாண்டத்தை கொடுத்துள்ளனர்.
வர்தா ராஜமன்னார் கதாப்பாத்திரத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் நன்றாக நடித்துள்ளார்.
நெருடலானவை:
கே.ஜி.எஃப் படத்தின் வெற்றியை இந்த படம் பிரதிபலிக்குமா என்பது கேள்விக்குறிய ஒன்று.
பல பாகங்களை எடுக்கும் பெரும்பாலான படங்கள் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு கதையை முடித்துவிட்டு அடுத்த பாகத்திற்கு தொடக்கத்தை கொடுப்பார்கள் ஆனால் இந்த படம் எந்தவித முடிவும் இல்லாமல் தொங்களில் முடித்ததை போன்ற உணர்வு ஏற்படுகின்றது.
முதல் பகுதியில் நாயகனுக்கு கொடுக்கும் பில்டப்களை குறைத்து கதை நகர்வை வேகப்படுத்தி திரைக்கதையை அமைத்திருந்தால் ஓரளவிற்கு படத்தின் ஒரு பகுதியில் ஒரு கதையை சொல்லியிருக்கலாம்.
படத்தில் பெரும்பாலன பகுதிகளில் துப்பாக்கியுடன் படைகள் திரிவதாக காட்டிவிட்டு ரத்தம் தெரிக்க கத்தி கோடாரியில் வெட்டி சாய்ப்பதாக காட்டப்படுவது நெருடலாக இருக்கிறது.
கே.ஜி.எஃப் படத்தை ஒருவர் கதை சொல்வதை போல் எடுத்திருந்தனர். அதே பாணியை இந்த படத்திலும் பின் பற்றியுள்ளார் இயக்குனர். ஆனால் அதிலிருந்த ஒரு சுவரஸ்யம் இதில் இல்லை.
தொகுப்பு:
கே.ஜி.எஃப் படத்தை தொடர்ந்து பிரசாந் நீல் இயக்கிய சலார் கே.ஜி.எஃப் வெற்றியை எட்டி பிடிக்க முடியாமல் சுமாரான படமாகவே உள்ளது. அதே போல் பாகுபலி படத்துக்கு பின் படு தோல்வி படமாக கொடுத்து வந்த பிரபாஸூக்கு அந்த தோல்விப்படங்களை ஒப்பிடும் போது இந்த படம் சற்று ஆறுதலான படம் என்று தான் சொல்ல வேண்டும். மொத்தத்தில் சலார் பகுதி-1 Ceasefire கே.ஜி.எஃப் பட பிரமாண்டத்தை எதிர்பார்க்காமல் பிரபாஸின் தோல்வி படங்களின் தாக்கத்தை மறந்தும் இந்த படத்தை பார்க்கலாம்.