பே வியூ புராஜெக்ட்ஸ் L L P மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் போனி கபூர் மற்றும் ராகுல் இணைந்து தயாரித்துள்ள படம் வீட்ல விசேஷம். ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற Badhaai Ho திரைப்படத்தின் மறு தமிழ்ப்பட உருவாக்கமாக வந்துள்ளது இப்படம். இப்படத்தை R J பாலாஜி மற்றும் N J சரவணன் இயக்கியுள்ளனர். கிரிஷ் கோபால கிருஷ்ணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை செல்வா R K தொகுத்துள்ளார்.
வீட்ல விசேஷம் திரைப்படத்தில் R J பாலாஜி இளங்கோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சத்யராஜ் உன்னி கிருஷ்ணன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஊர்வசி கிருஷ்ணவேணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அபர்ணா பாலமுரளி சௌம்யா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். K P A C லலிதா உன்னி கிருஷ்ணன் தாயாக நடித்துள்ளார். விஸ்வேஷ் அனிருத் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பவித்ரா லோகேஷ் சௌம்யா தாயாக நடித்துள்ளார். மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதைக்கரு.:
திருமண வயதில் மகன் இருக்கும் போது ஒரு தாய் கருவுற்றால் குடும்பத்தில் ஏற்படும் மன உளைச்சலை சொல்லியிருக்கும் படம்.
கதை.:
இரண்டு வருடத்தில் ஒய்வு பெறவிருக்கும் ரயில்வே ஊழியர் உன்னி கிருஷ்ணன். தன் மனைவி கிருஷ்ணவேணி, தாய், மகன் இளங்கோ மற்றும் அனிருத்துடன் ரயில்வே காலனியில் வசித்து வருகிறார். டப்மேஷ் செய்வதில் விருப்பம் கொண்டவர் உன்னி கிருஷ்ணன்.
இளங்கே ஒருபள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறான். அந்த பள்ளியின் நிர்வாகி சௌம்யா. சிறுவயதிலிருந்தே இருவரும் ஒன்றாக படித்தவர்கள். இப்போது காதலர்களாக இருக்கின்றனர். சௌம்யாவின் தாயார் கணவனை பிரிந்தவர். பல பள்ளிகூடங்களுக்கு நிர்வாகியாக இருப்பவர். இளங்கோவின் சகோதரன் அனிருத் பள்ளியில் படிப்பவன்.
உன்னி கிருஷ்ணன் மனைவி கிருஷ்ணவேணி மிகவும் அன்பானவள். குழந்தைகளையும் தன் மாமியாரையும் மிகுந்த பாசத்துடன் கவனித்து கொள்பவள். மாமியாரோ தன் மருமகளை எதற்கெடுத்தாலும் திட்டிக்கொண்டே இருப்பவள். உன்னி கிருஷ்ணனோ மனைவி மீதும் தாயின் மீதும் மிகுந்த பாசம் கொண்டவர்.
ஒரு நாள் உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்கு செல்கிறாள் கிருஷ்ணவேணி. அங்கே அவள் கர்பமாக இருப்பதாக சொல்கிறாள். உன்னி கிருஷ்ணன் இந்த வயதில் கருவுற்றால் சமூகம் தவறாக நினைக்கும் என்று சொல்கிறார். ஆனால் கிருஷ்ணவேணி இந்த குழந்தையை தான் பெற்றெடுப்பதாக சொல்கிறாள்.
கிருஷ்ணவேணி கர்பமாக இருப்பதை வீட்டில் தெரிவிக்கின்றனர், அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். இளங்கோ, அனிருத் இருவரும் தன் தாயை வெறுக்கின்றனர்.
வெளியில் சமூகம் அவர்களை அவமானப்படுத்துகிறது. இளங்கோ பள்ளிக்கு செல்லாமல் விடுப்பு எடுக்கிறான். அவன் பள்ளிக்கு வராத காரணத்தால் இளங்கோவின் வீட்டுக்கு செல்கிறாள் சௌம்யா. இளங்கோ அவளை வெளியில் அழைத்து செல்கிறாள். அவளிடம் தன் தாய் கர்பமாக இருப்பதை சொல்கிறான். சௌம்யா இதிலென்ன தவறு இருக்கிறது. இதை ஏன் தவறாக எடுத்துக்கொள்கிறாய் என்று சமாதானப்படுத்துகிறாள். அந்த சமாதானம் அவனை மாற்றவில்லை.
உன்னிகிருஷ்ணன் சகோதர் மகள் ஷாலு திருமணத்திற்கு செல்ல இளங்கோவையும் அனிருத்தை கூப்பிடுகின்றனர். ஆனால் அங்கே வந்து அவமானப்பட நாங்கள் தயாராக இல்லையென்று சொல்கின்றனர்.
திருமண நிகழ்ச்சியில் கிருஷ்ணவேணி அவமானப்படுத்தப்படுகிறார். ஒரு கட்டத்தில் தன் மருமகள் அவமானப்படுவதை பார்த்த மாமியார். அங்கிருப்பவர்களிடம் சண்டைபோட்டு கிருஷ்ணவேணிக்கு ஆதரவாக பேசுகிறார். தன்னை எப்போதும் திட்டிக்கொண்டே இருக்கும் மாமியார் தனக்காக பேசுவதை கண்டு ஆனந்த கண்ணீர் வடிக்கிறார் கிருஷ்ணவேணி.
தன் தாயின் 50 வது பிறந்தநாள் விழாவிற்கு அழைக்கிறாள் சௌம்யா. அந்த பிறந்த நாள் விழா முடிந்து சௌம்யாவின் தாயும் இளங்கோவின் தாயை அவமானப்படுத்துகிறார். இதனால் சௌம்யாவின் தாயிடம் தன் தாய்க்காக சண்டை போடுகிறான் இளங்கோ. தன் தாய் அவமானப்படுவதை பொறுக்காத சௌம்யா இளங்கோவிடம் தன் தாயிடம் மன்னிப்பு கேட்க சொல்கிறாள். இளங்கோ என் தாயை அவமானப்படுத்தும் போது எனக்கு எப்படியிருக்கும் மன்னிப்பு கேட்க முடியாது என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வருகிறான். சௌம்யா இளங்கோ காதலில் விரிசல் விழுகிறது.
வீட்டில் இளங்கோவின் தம்பி அனிருத் முகமெல்லாம் அடிபட்டு இருக்கிறான். காரணத்தை கேட்கிறான் இளங்கோ. அம்மாவை அவமானப்படுத்திய பள்ளி மாணவர்களுடன் ஏற்பட்ட சண்டையில் அடிபட்டதாக சொல்கிறான்.
திருமண வீட்டிலிருந்து திரும்பி வந்த தன் தாயிடம் மன்னிப்பு கேட்கின்றனர் இளங்கோவும் அனிருத்தும்.
சௌம்யாவுடன் ஏற்பட்ட பிரச்சனையை தெரிந்து கொண்ட கிருஷ்ணவேணி இளங்கோவிடம் சௌம்யாவின் தாயிடம் சென்று மன்னிப்பு கேட்க சொல்கிறாள். இளங்கோ சௌம்யாவின் தாயிடம் மன்னிப்பு கேட்கிறான். சௌம்யாவின் தாய் சௌம்யாவிடம் இளங்கோவிடம் சென்று பேச சொல்கிறாள்.
கிருஷ்ணவேணிக்கு குழந்தை பிறக்கிறது. அனைவரும் இணைந்து சந்தோஷமாக இருக்கின்றனர்.
பாராட்டுக்குறியது.:
LKG, மூக்குத்தி அம்மன் என்று சொந்த கதைகளை படமாக எடுத்த இவர்கள் மிகப்பெரிய வெற்றிபெற்ற ஹிந்தி படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளனர். ரீமேக் கதையாக இருந்தாலும் இங்கே கதை நடப்பதற்கேற்ப மாற்றம் செய்துள்ளனர்.
உன்னி கிருஷ்ணன் கதாப்பாத்திரத்தில் சத்யராஜ் அருமையாக நடித்துள்ளார்.
கிருஷ்ணவேணி கதாப்பாத்திரத்தில் ஊர்வசி அருமையாக நடித்துள்ளார்.
உன்னி கிருஷ்ணன் தாயாக மறைந்த நடிகை லலிதா அருமையாக நடித்துள்ளார்.
ஆனியன் பிஸ்கட் என்ற புதுரக பிஸ்கட் பற்றி சொல்லியிருக்கின்றனர்.
நகைச்சுவைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையை தேர்தெடுத்துள்ளது அருமை. அதையும் ரசிக்கும் படியாக எடுத்துள்ளனர்.
நெருடலானவை.:
R J பாலாஜி இளங்கோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நகைச்சுவை பாத்திரங்களிலேயே அதிகம் நடித்துள்ளவர். வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்க அதிகம் சிரமப்பட்டிருப்பது தெளிவாக உணரமுடிகிறது.
ஊரிலும் சுற்றத்தாரிடமும் அவமானப்படும் போதும் சரி, தன் காதலி எடுத்து சொல்லிய போதும் சரி திருந்தாத கதாப்பாத்திரங்கள் சட்டென்று திருந்துவது போன்று காட்டியிருப்பது நாடகத்தனமாக இருக்கிறது.
தொகுப்பு.:
வீட்ல விசேஷம் குடும்பத்துடன் பார்க்ககூடிய Family Entertainer ஆக இருக்கிறது.