விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் விஷால் தயாரித்துள்ள படம் வீரமே வாகை சூடும். அறிமுக இயக்குனர் து பா சரவணன் எழுதி இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா பதினொன்றாவது முறையாக விஷால் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே சண்டை கோழி, திமிரு, தாமிரபரணி, தீராத விளையாட்டுப்பிள்ளை, அவன் இவன், சமர், பூஜை, இரும்புத்திரை, சண்டகோழி2 மற்றும் சக்ரா படங்களுக்கு இதற்கு முன் இசையமைத்துள்ளார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். N B ஸ்ரீகாந்த் படத்தை தொகுத்துள்ளார்.
வீரமே வாகை சூடும் படத்தில் விஷால் போரஸ் என்கிற புருஷோத்தமன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். டிம்பிள் ஹயாதி போரஸ் காதலி மைதிலி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்., யோகிபாபு போரஸ் நண்பன் தளபதி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ரவீணா ரவி போரஸ் தங்கை துவாரகா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். G மாரிமுத்து போரஸ் தந்தை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். துளசி போரஸ் தாய் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பாபுராஜ் வில்லன் நெடுஞ்செழியன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார், ஆடுகளம் V I S ஜெயபாலன் வில்லன் நெடுஞ்செழியன் தந்தை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மறைந்த நடிகர் RNR மனோகர் போலிஸ் உயரதிகாரி காட்டமுத்து கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இளங்கோ குமாரவேல் பரிசுத்தம் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கவிதா பாரதி போலிஸ் இன்ஸ்பெக்டர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஜார்ஜ் மரியான் ரகுபதி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதைக்கரு.:
தங்கையை கொன்றவர்களை கண்டு பிடித்து வதம் செய்யும் நாயகனின் வழக்கமான கதை. ஏராளமான கதைகள் இந்த அடிப்படையில் தமிழில் வந்துள்ளது.
கதை.:
போரஸ் என்கிற புருஷோத்தமன் போலிஸ் இண்ஸ்பெக்டர் பதவிக்கு தேர்வெழுதி வேலைக்காக காத்திருக்கிறான். அவர் தந்தை போலிஸ் காண்ஸ்டெபில், தாய் மற்றும் கல்லூரியில் படிக்கும் தங்கை துவாரகாவுடன் வாழ்ந்து வருகிறான்.
மைதிலி வங்கியில் பணிபுரிபவள். பள்ளி பருவத்திலிருந்தே போரஸும் மைதிலியும் காதலிக்கின்றனர். மைதிலியின் தந்தைக்கு போரஸை பிடிக்கவில்லை. சிறுவயதிலிருந்தே இவர்களை பிரிக்க முயற்சிக்கின்றார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரும் தவறு செய்திருப்பார்கள் என்று எண்ணி அவர்கள் திருமணத்திற்கு ஒத்துக்கொள்கின்றார்.
போரஸ் தங்கை துவாரகாவை ரவுடி செல்வத்தின் தம்பி ஒரு தலையாக காதலித்து அவளுக்கு தொல்லை கொடுக்கின்றான். போரஸ் குணாவை அடித்து கையை உடைக்கின்றான். அதை பார்த்த போரஸ் தந்தை நீ கோபப்பட்டால் போலிஸ் வேலையில் சேரமுடியாது என்று கண்டிக்கின்றார். போரஸ் வீட்டிற்கு கீழ் குடியிருப்பவன் துவாரகாவுடன் கல்லூரியில் படிப்பவன் பைசல். துவாரகாவை பைசல் காதலிப்பதாக போரஸிடம் சொல்கின்றான் பைசல். அவன் நல்ல குணத்தை பார்த்து இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்கின்றனர்.
நெடுஞ்செழியன் கெமிக்கல் ஃபேக்டரியால் பரிசுத்தத்தின் மகன் பாதிக்கப்படுகின்றான். இந்த கெமிக்கல் ஃபேக்டரியால் பலரும் பாதிக்கப்படுவார்கள் என்று மக்களை திரட்டி போராட முயல்கின்றான். ஆனால் நெடுஞ்செழியன் தந்தை இந்த ஃபேக்டரி அவர்களின் கௌரவத்திற்கான அடையாளம். இதை எந்த காரணத்தாலும் மூடவிடக்கூடாது உயிரைக்கொடுத்தேனும் காப்பாற்ற வேண்டுமென்று நெடுஞ்செழியனிடம் சொல்கின்றான்.
ரகுபதி முதலைப்பண்ணையில் வேலை செய்பவர். அவர் மகள் திவ்யா கல்லூரியில் தன்னுடன் படிக்கும் போலிஸ் அதிகாரி காட்டமுத்துவின் மகன் கிருஷ்ணனுடன் இருந்த வீடியோவை அவன் நண்பர்களிடம் காட்டுகின்றான். அவர்களில் கெமிக்கல் ஃபேக்டரி முதலாளி நெடுஞ்செழியனுடைய தம்பியும் இருக்கின்றான். திவ்யாவை அந்த வீடியோவை வைத்து மிரட்டுகின்றனர். நீ எங்களுடனும் இருக்க வேண்டுமென்று சொல்கின்றனர்.
செல்வத்தின் தம்பி குணா துவாரகாவின் மீது பெட்ரோலை ஊற்றி தன் மீதும் பெட்ரோல் ஊற்றி தன்னை காதலிக்க சொல்லி மிரட்டுகின்றான். வேறு வழியில்லாமல் நான் உன்னை காதலிக்கிறேன் என்று பொய் சொல்லிவிட்டு. வீட்டுக்கு சென்று தூக்கு மாட்டிக்கொள்ள முயலும் போது அக்கம்பக்கத்தினர் வந்து காப்பாற்றுகின்றனர்.
அதே நேரம் கிருஷ்ணன் நண்பர்கள் பயமுறுத்தல் காரணமாக தூக்கில் தொங்க எத்தனிக்கும் திவ்யாவையும் காப்பாற்றுகின்றனர் அக்கம்பக்கத்தினர்.
பரிசுத்தத்திடம் போராட்டத்தை வாபஸ் வாங்க சொல்ல செல்லும் நெடுஞ்செழியனை பரிசுத்தம் அவமானப்படுத்தி அனுப்புகிறான்.
போரஸ் தந்தை தன் மகளை மிரட்டிய குணாவின் மீது இன்ஸ்பெக்டரிடம் புகார் கொடுக்கிறார். அதே நேரம் ரகுபதியும் போலிஸ் உயரதிகாரி காட்டமுத்துவின் மகன் பேரில் புகார் கொடுக்கிறார். இன்ஸ்பெக்டர் ரவுடி செல்வத்திற்கு போன் செய்து காண்ஸ்டபில் மகளிடம் தவறு செய்த குணாவின் மீது புகார் வந்துள்ளதாக சொல்கிறார். அந்த புகாரை வாபஸ் பெற செய்யாவிட்டால் உன் மீதும் உன் தம்பி மீதும் நடவடிக்கை பாயும் என்று சொல்கிறார்.
அதே போல் காட்டமுத்துவிற்கு போன் செய்து இந்த புகாரை பதிவு செய்தால் அவருக்கு மிகப்பெரிய பிரச்சனை என்று சொல்கிறார்.
செல்வம் போரஸ் தந்தையிடம் குணாவை அழைத்து சென்று மன்னிப்பு கேட்க சொல்கிறார். போரஸ் புகாரை வாபஸ் வாங்க கூடாது என்று பிடிவாதமாக இருக்கிறான். ஆனால் துவாரகாவிடம் குணாவை செருப்பால் அடிக்க சொல்கிறான் இனி குணா பிரச்சனை செய்தால் நானே அவனை கொன்று விடுவேன் என்று சொல்லி செல்வம் வழக்கை வாபஸ் பெற சொல்கிறான். போரஸ் தந்தையும் போரஸ் கோபத்தை தடுக்கவும் போலிஸ் வேலை கிடைக்கவும் வழக்கை வாபஸ் வாங்குகிறார்.
காட்டமுத்து ரகுபதியை சந்தித்து மொபைலில் உள்ள வீடியோவை டெலிட் செய்வதாகவும். மீண்டும் இது போல் தவறு நடக்காது என்று சொல்லி திவ்யாவை மூன்று பேரையும் செருப்பால் அடிக்க வைக்கிறார்.
பரிசுத்தத்தால் தனது ஃபேக்டரிக்கு ஆபத்து என்று அவனை கடத்தி கொலை செய்ய முயல்கிறான் நெடுஞ்செழியன்.
தன் அவமானத்திற்கு பழி வாங்க துவாரகாவை கடத்த திட்டமிடுகிறான் குணா.
அதே போல் அவமானத்திற்கு பழி வாங்க திவ்யாவை கடத்த திட்டுமிடுகின்றனர், கிருஷ்ணன், நெடுஞ்செழியன் தம்பி மற்றும் நண்பன்.
ஷேர் ஆட்டோவில் வந்த திவ்யாவை கடத்த பின் தொடர்கின்றனர் கிருஷ்ணனும் நண்பர்களும். அந்த தெருவில் இருக்கும் மின் இணைப்பை துண்டிக்கின்றனர்.
மற்றொரு பக்கம் குணா துவாரகாவை கடத்த காத்திருக்கிறான்.
பஸ்ஸில் சென்று கொண்டிருந்த பரிசுத்தத்தை நெடுஞ்செழியனின் ஆட்கள் மோட்டலில் பஸ் நிற்கும் போது கடத்துகின்றனர்.
இதற்கிடையே மெடிக்கலிற்கு மருந்து வாங்க சென்ற துவாரகா திரும்ப வரவில்லை என்று போரஸ் தாய் சொல்கின்றாள். பைசலும் போரஸூம் துவாரகாவை தேடி செல்கின்றனர். அப்போது போரஸை பார்த்த குணா ஜகா வாங்குகின்றான். மெடிக்கல்காரர் துவாரகா மருந்து வாங்கிகொண்டு அப்போதே கிளம்பிவிட்டதாக சொல்கிறார். மெடிக்கலை விட்டு வெளியே வரும் போது ஒருவர் எவனோ ஃபியூஸ் கேரியரை பிடிங்கி போட்டுள்ளதாக தெரிவிக்கிறார். துவாரகா காணாமல் போன தகவலை தாய்க்கு தெரிவிக்கிறான் போரஸ். போரஸ் தந்தைக்கு தகவல் போகின்றது. அனைவரும் துவாரகாவை தேடுகின்றனர்.
கிருஷ்ணனும் நண்பர்களும் இருட்டில் திவ்யாவிற்கு பதில் துவாரகாவை கடத்தியதை தெரிந்து அதிர்ச்சியடைகின்றனர். ஆனால் அவர்களிடமிருந்து தப்பி துவாரகா ஒரு ஃபேக்டரிக்குள் செல்கிறாள். அங்கே நெடுஞ்செழியன் பரிசுத்தத்தை தலையை துண்டிப்பதை துவாரகா பார்த்து விடுகிறாள். அவளை துரத்தி வந்த கிருஷ்ணனும் நெடுஞ்செழியன் தம்பியும் அங்கு வருவதை பார்த்து அதிர்ச்சியாகிறான். என்ன விஷயம் இவள் யார் என்று கேட்கிறான் நெடுஞ்செழியன். ஆளை மாற்றி கடத்தியதை சொல்கின்றனர். ஆனால் கொலையை அவள் பார்த்துவிட்டதால் அவளை கொல்ல துரத்துகின்றனர். துவாரகா தன் தந்தைக்கு போன் செய்கிறாள். வண்டியில் சென்று கொண்டிருந்த துவாரகா தந்தை போனில் பேச முனையும் போது விபத்தில் சிக்குகின்றார். துவாரகா பைசல் மொபைலுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறாள். ஆனால் போரஸூம் பைசலும் துவாரகாவை தேடிக்கொண்டிருக்கின்றனர். பைசல் மொபைலில் சார்ஜ் இல்லாத காரணத்தால் சார்ஜில் போட்டு வீட்டிலேயே மொபைலை விட்டு சென்றிருந்தான். துவாரகா மாட்டிக்கொள்கிறாள். அவளிடமிருந்து மொபைலை வாங்கி வாய்ஸ் மெசேஜ் அனுப்பியது பைசலுக்கு என்று தெரிந்து கொள்கிறான் நெடுஞ்செழியன். ஆனால் பைசல் தங்கள் கல்லூரியில் படிப்பவன் என்று சொல்கிறான். நெடுஞ்செழியன் தந்தை பைசலை கண்டுபிடித்து மெசேஜை படிக்காமல் பார்த்து கொள்ளுமாறும், அப்படியே படித்துவிட்டால் அவனையும் கொல்லுமாறும் சொல்கிறான். துவாரகாவை கொல்ல முயலும் போது துவாரகா தன் அண்ணன் அவர்களை கண்டுபிடித்து கொல்வான் என்று சொல்லிவிட்டு இறந்து போகிறாள்.
போரஸ் தந்தை விபத்தில் சிக்கிய தகவல் தெரிந்து மருத்துவமனைக்கு செல்கிறான் போரஸ். காலை ஆறு மணி வாக்கில் பைசல் போரஸிடம் நான் வீட்டிற்கு போகிறேன். ஒரு வேலை துவாரகா தன் மொபைலுக்கு ஏதாவது மெசேஜ் அனுப்பியிருக்கலாம் நான் சென்று பார்க்கிறேன் என்று வீட்டிற்கு செல்கிறான். துவாரகா இறந்த தகவலை போரஸ் தந்தையுடன் பணிபுரிந்த மற்றொரு காண்ஸ்டபில் சொல்கிறார்.
இதற்கிடையில் வீட்டிற்கு சென்ற பைசலை நெடுஞ்செழியனின் ஆட்கள் கொலை செய்கின்றனர்.
துவராகாவின் இறுதி சடங்கை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் போரஸ் அங்கிருந்து செல்லும் ஆம்புலன்சை பார்க்கிறான். நெடுஞ்செழியனின் கைக்கூலியான இன்ஸ்பெக்டரிடம் அது பற்றி விசாரிக்கிறான். துவாரகா இறந்த துக்கத்தால் பைசல் தன் கையை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக சொல்கிறார்.
துவாரகாவை கொலை செய்ததாக ஒப்புகொண்டு குணா போலிஸில் சரணடைந்ததாக செய்தி வருகிறது. நெடுஞ்செழியன் ஓரு வழியாக எல்லாம் முடிந்ததாக நினைக்கிறான்.
ஆனால் பைசல் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்பட்ட நேரம் துவாரகா கொலை செய்யப்பட்ட தகவலுக்கு முன்பு என்று தெரிந்து போரஸ் அதிர்ச்சியடைகிறான். இதில் ஏதோ தவறு நடந்திருப்பதை உணர்கிறான்.
போரஸ் மற்றும் தளபதி இணைந்து இதை கண்டுபிடிக்க முயல்கின்றனர். போரஸ் அபார்ட்மென்ட் செக்யூரிட்டி இரண்டு முகமூடி போட்ட நபர்கள் பைசல் கொலையான போது பைப்பில் இறங்கி வந்ததாக சொல்கிறான். CCTV பதிவிலிருந்து முகமூடி நபர்களின் படத்தை எடுக்கிறான். அதைவைத்து வரைகலை நிபுணனிடம் அந்த படத்தை முழுமைப்படுத்தி வாடகை கொலையாளியை கண்டு பிடிக்கிறான். அப்போது தான் எராளமான வாடகை கொலையாளிகள் இதன் பின் புலத்தில் இருப்பதை அறிகிறான். அனைவருக்கான பணமும் வங்கி பரிவர்த்தனை மூலம் தான் நடந்திருப்பதாக தெரிந்து வங்கியில் வேலை செய்யும் தன் காதலி மைதிலி மூலம் பணத்தை அனுப்பியவன் மூலத்தை கண்டு பிடிக்கிறான். அது நெடுஞ்செழியனிடம் இருக்கும் அடியாட்களில் ஒருவன். அவனைத்தேடி செல்கிறான் ஆனால் அவனும் இறந்து விட்டதாக அறிந்து கொள்கிறான்.
துவாரகா மற்றும் பைசல் மொபைல் போனில் நீக்கப்பட்ட தகவலை தெரிந்து கொள்ள ஒரு ஹேக்கரை அனுகுகிறான். ஆனால் சர்வரில் இருந்து அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதை அந்த ஹேக்கர் சொல்கிறான்.
தான் கடத்தி கொலை செய்ததாக சரணடைந்த குணாவை பார்த்தால் ஏதாவது தகவல் கிடைக்கும் என்று போரஸ் நினைக்கிறான். இந்த தகவல் நெடுஞ்செழியன் கைக்கூலியான இன்ஸ்பெக்டருக்கு தெரிந்து சிறைக்குள்ளேயே குணாவை கொலை செய்கிறார். ஆனால் இன்ஸ்பெக்டர் இந்த நிகழ்வுக்கு பின்னால் இருப்பதை போரஸ் தெரிந்து கொண்டதை உணர்ந்த நெடுஞ்செழியன் அவனையும் கொல்கிறான்.
எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டதாக அறிந்து குழம்பிப்போகிறான் போரஸ். அப்போது தான் மெடிக்கல் உள்ளே தான் ஏதோ நடந்துள்ளது என்று உணர்கிறான். மெடிக்கலில் உள்ள CCTV மூலம் பதட்டத்துடன் திவ்யா உள்ளே நுழைவதை பார்க்கிறான் போரஸ்.
இதற்கிடையே திவ்யா மூலம் உண்மையை கண்டறிய வாய்ப்புள்ளதாக உணர்ந்த நெடுஞ்செழியன் அவளையும் கொலை செய்கிறான்.
மருத்துவமனையில் திவ்யாவின் உடலருகில் இருக்கிறான் போரஸ். அப்போது நெடுஞ்செழியனின் அடியாள் நெடுஞ்செழியனுக்கும் போன் செய்து திவ்யா இறந்த தகவலை சொல்கிறான். அப்போது ஹேக்கர் மூலம் திருப்பி எடுக்கப்பட்ட துவாரகாவின் வாய்ஸ் மெசேஸ் நெடுஞ்செழியன் அடியாள் போன் வழியே நெடுஞ்செழியனுக்கு கேட்கிறது.
இனி வேறு வழியில்லை போரஸ் தன்னை கண்டுபிடித்துவிட்டான் இனி நேருக்கு நேர் மோதுவது என்று முடிவு செய்கிறான். போரஸ் தந்தையை கடத்தி போரஸை வரவழைக்கிறான். அங்கே வரும் போரஸ் அனைவரையும் துவம்சம் செய்கிறான். அவர்களை கொலை செய்தால் போலிஸ் வேலை கிடைக்காது என்று நெடுஞ்செழியன் சொல்கிறான். அப்போது சிறையில் நெடுஞ்செழியனால் கொல்லப்பட்ட குணாவின் அண்ணன் செல்வத்தின் மூலம் அனைவரையும் கொல்கின்றான்.
போலிஸ் வேலையில் சேர்கின்றான் போரஸ். அங்கே தன் மகனை கண்டு பிடித்து கொடுக்குமாறு காட்டமுத்து கேட்கிறான். ஆனால் ரகுபதி தன் மகள் மரணத்திற்கு காரணமானவர்களை தன் முதலை பண்ணை முதலைகளுக்கு உணவாக கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
பாராட்டுக்குறியவை.:
வழக்கமான பழிவாங்கும் கதை என்றாலும் மூன்று கதைகள் மூலம் சஸ்பென்ஸ் முடிச்சுகளை போட்டு ஒவ்வொன்றாக அவிழும் அடிப்படையிலான திரைக்கதை அமைத்து விறுவிறுப்பாக்கியுள்ளார் இயக்குனர்.
விஷாலின் வழக்கமான அதிரடி சரவெடி இதிலும் தொடர்கின்றது.
யோகிபாபு படம்முழுக்க விஷாலுக்கு துணையாக வருகின்றார். அங்கங்கு சிரிக்கவும் வைக்கின்றார்.
விஷால் டிம்பிள் ஹயாதி காதல் உருவாக அடிப்படையை தேடாமல் சிம்பிளாக பள்ளி பருவம் முதல் காதலிக்கும் அடிப்படை காட்டி காட்சியை டக்கென்று முடித்து படத்தின் பிற பகுதிகளுக்கு இடம் கொடுத்துள்ளார்.
விஷாலின் தங்கை துவாரகாவாக நடித்திருக்கும் ரவீணா ரவிக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
வில்லனாக பாபு ராஜ் நன்றாக நடித்துள்ளார்.
நெருடலானவை.:
கதாநாயகிக்கு பெரிய அளவு வேலையில்லை. ஒரே ஒரு பாடல் மட்டும் அது மாண்ட்டேஜ் அடிப்படையிலானது. இன்னும் கொஞ்சம் அவருக்கான இடத்தை அதிகப்படுத்தியிருக்கலாம்.
பைசல் மற்றும் துவாரகா காதல் காட்சிகளில் செயற்கை தனத்தை உணரமுடிகின்றது. கல்லூரியில் படிக்கும் மாணவனுக்கு நிச்சயம் செய்வதாக கூறுவது அபத்தத்தின் உச்சம்.
துவாரகாவை கொன்றது தெரிந்தால் போரஸ் தன்னை கண்டுபிடுத்துவிடுவான் என்று நினைக்கும் வில்லன் பலரையும் கொல்கிறான். தனக்கு விசுவாசமான இன்ஸ்பெக்டரையும் கொல்கிறான். தடயங்களை அழிக்க முயல்கிறான். அதற்கு பதில் நேரடியாக கூலி படை மூலம் போரஸையே கொன்றிருக்கலாம். ஒருவனை கொல்வதற்கு பதில் இவ்வளவு கொலைகளை செய்வதாக காட்டுவது சினிமாத் தனத்தின் உச்சமா? அல்லது டைரக்டரின் மோசமான சிந்தனையா?.
மிகவும் விறுவிறுப்பாக சென்ற கதையில் இறுதி காட்சியில் சர்வரில் இருந்து நீக்கப்பட்ட மொபைல் தகவலை மீட்டு அதன் அடிப்படையில் படத்தை முடித்திருப்பது. அவ்வளவு நேரம் புத்திசாலித்தனமாக கதை நகர்த்திய இயக்குனர் எப்படி முடிப்பது என்று தெரியாமல் தவித்திருப்பது புரிகிறது. உப்பு சப்பில்லாமல் இந்த காட்சியமைப்பு இருக்கிறது.
தொகுப்பு.:
வீரமே வாகை சூடும் விறு விறுப்பிற்கு பஞ்சமில்லை. ஆனால் ஏராளமான பழிவாங்கும் படங்களை பார்த்து பார்த்து சலிப்படைந்துள்ள காரணத்தால் படம் மனதில் பதிய மறுக்கின்றது.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.
We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.