Join/Follow with Our Social Media Links

புஷ்பா தி ரைஸ் பகுதி 1 திரை விமர்சனம்

புஷ்பா தி ரைஸ் பகுதி 1 திரை விமர்சனம்


மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்ஷெட்டி மீடியா சார்பில் நவீன் யாமினி மற்றும் Y ரவிசங்கர் இணைந்து தயாரித்துள்ள படம் புஷ்பா தி ரைஸ். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படம் முதல் பாகம் புஷ்பா தி ரைஸ் என்ற தலைப்பிலும் இரண்டாம் பாகம் புஷ்பா தி ரூல் என்ற தலைப்பிலும் உருவாகியுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகியுள்ளது. இந்த படத்தை ரங்கஸ்தலம் வெற்றிப்படத்தை தொடர்ந்து சுகுமார் எழுதி இயக்கியுள்ளார். இவர் அல்லு அர்ஜூனை வைத்து ஆர்யா திரைப்படத்தை 2004 ல் தன் முதல் படமாக இயக்கினார். இந்த படம் தான் நடிகர் தணுஷ் நடிப்பில் குட்டி என்ற பெயரில் தமிழில் ரீமேக் படமாக வெளிவந்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மிர்ரேஸ்டா கூபா புரோஷெக் ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திகா ஸ்ரீநிவாஷ் மற்றும் ரூபன் படத்தை தொகுத்துள்ளனர்.

புஷ்பா தி ரைஸ் படத்தில் அல்லு அர்ஜூன் புஷ்பா எனும் புஷ்பராஜ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா ஸ்ரீவள்ளி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பகத் பாசில் பன்வார் சிங் ஷெகாவத் என்ற போலிஸ் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சுனில் மங்களம் சீனு கதாப்பாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். மூக்குத்தி அம்மன் படத்தில் வில்லனாக நடித்த அஜய் கோஷ் கொண்டா ரெட்டி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தனஞ்செய் ஜாலி ரெட்டி கதாப்பாத்திரத்தில் கொண்டா ரெட்டி தம்பியாக நடித்துள்ளார். சந்துரு D S P கோவிந்தப்பா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ராவ் ரமேஷ் பூமிரெட்டி சித்தபா நாயுடு M L A கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதைக்கரு.:

எதிர்மறை கதாப்பாத்திரங்களை கதாநாயகனாக சித்தரித்து ஏராளமான திரைப்படங்கள் வந்துள்ளது. தமிழக ஆந்திரா எல்லைப்பகுதியில் நடைபெறும் செம்மரக்கடத்தல் குற்றச்செயலை பின் புலமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. சாமானியன் ஒருவன் படிப்படியாக முன்னேறி செம்மர கடத்தல் மாஃபியா தலைவனாக வளர்வதை கருவாக கொண்டு புஷ்பா தி ரைஸ் திரைப்படம் உருவாகியுள்ளது.

கதை.:

முல்லேட்டி வெங்கட ரமண ராஜூ ஊரில் மிகப்பெரிய மனிதன். அவருக்கு அதிகாரமற்ற மனைவி அதாவது ஊருக்கு  தெரியாத வாழ்கையை வாழ்ந்தவள் தான் புஷ்ப ராஜ் தாய். வெங்கட ரமன ராஜூவின் முதல் மனைவி மகன்கள், புஷ்ப ராஜூக்கு வெங்கட ரமண ராஜூவின் மகன் என்ற அங்கீகாரத்தையும், தகப்பன் பெயரை இனிசியலாக போட அணுமதிக்காதவர்கள். வெங்கட ரமண ராஜூவின் மரணத்தின் போதுகூட புஷ்ப ராஜையும் அவன் தாயையும் பார்க்கவிடாமல் விரட்டியடிக்கின்றனர்.  புஷ்ப ராஜ் எப்போதும் தனது தனித்துவத்தை யாருக்காகவும் விட்டு தராதவன். யாருக்கும் அடிபணியாதவன். அவனுக்கு இருக்கும் ஒரு மனக்குறை தந்தை பெயர் தெரியாதவன் என்பது தான்.

புஷ்பராஜ் வளர்ந்து டிம்பர் டிப்போவில் வேலை செய்கிறான். அப்போது முதலாளி முன் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கிறான். அங்கே வரும் முதலாளி ஏன் மரியாதை கொடுக்காமல் உட்கார்ந்திருக்கிறான் என்று கேட்கிறான். வேலைக்குத்தான் கூலி கொடுக்கிறான். மரியாதைக்கு இல்லையென்று வேலையை உதறிவிட்டு செல்கிறான். முதலாளியின் கைத்தடியான கேசவன் என்னும் மொக்கையும் புஷ்பா பெரியாளாக வருவான் என்று சொல்லி அவனும் புஷ்பாவின் பின்னே செல்கிறான். ஒரு இடத்தில் செம்மரம் வெட்ட ஆட்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். புஷ்பாவும் மொக்கையும் செம்மரம் வெட்ட செல்கின்றார். அதில் ஆபத்து என்று தெரிந்தும் தைரியமாக செல்கிறான். அப்போது அங்கே ரெய்டுக்கு வருகிறான் D S P கோவிந்தப்பா. மரம் வெட்ட வந்த அனைவரும் தப்பி ஓட முயற்சிக்கின்றனர். ஆனால் புஷ்பா அவர்களை தடுத்து நிறுத்தி போலிஸிற்கு தெரியாமல் மரத்தின் உயரத்தில் வெட்டிய மரங்களை கட்டி வைத்து அங்கு வந்த கோவிந்தப்பாவை அவமானப்படுத்தி அனுப்புகிறான். மரத்தை மீண்டும் இறக்கி லாரியில் ஏற்றி கொண்டு செல்ல முயல்கிறான். அப்போது மீண்டும் துப்பாக்கிகளுடன் வரும் போலிஸிடமிருந்து செம்மர லாரியை எடுத்து சென்று கிணற்றில் தள்ளிவிட்டு போலிஸின் பார்வையில் இருந்து மறைக்கிறான். போலிஸ் அவனை கைது செய்து மரக்கட்டைகள் எங்கே என்று அடித்து உதைக்கின்றது. போலிஸ் வழக்கு போட்டு கைது செய்து கோர்டுக்கு அழைத்து செல்கிறது.

வழியில் சாப்பிடும் போது அங்கே மிகப்பெரிய அரசியல் ரவுடி மற்றும் செம்மரகடத்தல் முக்கியபிரமுகர் கொண்டா ரெட்டி அவரின் சகோதரகர்கள் ஜாலி ரெட்டி மற்றும் சத்தா ரெட்டி இருவரும் பார்க்க வருகின்றனர். ஜாலி ரெட்டி பெண் பித்தன் ஒரு பெண் பிடித்துவிட்டது என்றால் போதும் அவளை சொந்தமாக்கிக்கொள்வான். சத்தா ரெட்டி ஒட்டு மொத்த செம்மர கடத்தலின் வரவு செலவுகளை பார்த்துக்கொள்பவன். இருவரும் புஷ்பாவை பார்க்க வருகின்றனர். புஷ்பாவை ஜாமினில் எடுத்து செம்மரகட்டைகள் எங்கே என்று விசாரிக்கின்றான். ஐந்து லட்சம் கொடுத்தால் சொல்வதாக சொல்கிறான். லாரி மற்றும் செம்மரகட்டையை கிணற்றில் இருந்து எடுத்து கொடுக்கிறான். ஐந்து லட்சம் பணத்தை கொடுத்துவிட்டு ஆட்டோவில் வரசொல்கிறான் சத்தா ரெட்டி. அதை அவமரியாதையாக நினைக்கும் புஷ்பா மொக்கையிடம் அந்த பணத்தைக்கொண்டு ஒரு OMNI காரை வாங்கிவரச்சொல்கிறான். அந்த காரை அம்மாவிடம் காட்டிவிட்டு கொண்டா ரெட்டியை சந்திக்க செல்கிறான் புஷ்பா. சத்தா ரெட்டியும் கொண்டா ரெட்டியும் ஒருவனை அடித்துக்கொண்டிருக்கின்றனர். செம்மர லாரியை போலிஸில் மாட்டிவிட்ட காரணத்தால். போலிஸ் கண்ணில் மண்ணை தூவி செம்மரத்தை எடுத்து செல்வது கடினமாக உள்ளதாக சொல்கிறான் சத்தா ரெட்டி. ஆனால் அது ஒன்றும் கடினம் அல்ல எளிதான ஒன்று தேவை புத்திசாலித்தனம் என்று சொல்கின்றான் புஷ்பா. மேலே பால் வண்டி செட்டப்பில் அடிப்பாகத்தில் செம்மரகட்டைகளை நிரப்பி எடுத்து செல்ல சொல்கிறான். செம்மரத்தை எடுத்து செல்லும் வேலையை புஷ்பாவிடம் ஒப்படைக்கின்றார் கொண்டா ரெட்டி. அதற்கு ஒரு லோடுக்கு ஐந்து லட்சம் தருவதாக சொல்கிறார். ஆனால் புஷ்பாவோ ஒரு லோடுக்கு 4% கேட்கின்றான். 4 சதவீதம் என்றால் நான்கு லட்சம் தான் ஒரு லட்சம் நஷ்டம் என்று மொக்கை சொல்கின்றான். ஆனால் புஷ்பாவோ ஐந்து லட்சம் வாங்கினால் நான் கூலிக்காரன். ஆனால் இப்போது நான் பங்குதாரர் என்று சொல்கிறான்.

பால் வண்டி வழியே செம்மரக்கட்டை கடத்த டிரைவராக இருப்பவர் ஸ்ரீவள்ளியின் தந்தை. ஸ்ரீவள்ளி பால்வியாபாரம் செய்கிறாள். அவளை பார்த்தவுடனே புஷ்பாவிற்கு அவள் மீது காதல் வருகிறது. ஆனால் அவள் காதலை பெற மொக்கையின் மொக்கையான திட்டங்கள். சிரஞ்சீவி படத்திற்கு பிளாக்கில் டிக்கெட் வாங்கி வள்ளி மற்றும் அவளது தோழிகளுக்கு கொடுக்கின்றான் மொக்கை. பதிலுக்கு வள்ளி புஷ்பாவை பார்க்க வேண்டுமென்று சொல்கின்றான். புஷ்பா தோழிகள் வற்புறுத்தல் காரணமாக ஒத்துக்கொள்கிறாள். கோவிலுக்கு வரும் புஷ்பாவை வள்ளி பார்த்துவிட்டு செல்கிறாள். அதை பார்த்த புஷ்பா வள்ளி காதலால் தான் பார்த்ததாக எண்ணி அவளிடம் பேசுகிறான். வள்ளியோ சிரஞ்சீவி படத்துக்கு 1000 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து கொடுத்த காரணத்தால் பார்த்ததாக சொல்கிறாள். மொக்கையிடம் நீ போய் 5000 ரூபாய் கொடுத்து வள்ளியை தனக்கு முத்தம் கொடுக்க சொல் என்று சொல்கிறான். வள்ளி முத்தம் கொடுக்க தயங்குகிறாள். நான் முதல் முத்தத்தை தான் கட்டிக்க போகும் கணவரிடம் பகிர்ந்து கொள்வேன் என்று சொல்லிவிட்டு செல்கிறாள்.

பால் வண்டியில் கீழ்ப்புறம் மறைத்து கடத்தப்படும் செம்மர கட்டைகளை கடத்திக்கொண்டு செல்லும் போது கோவிந்தப்பா அதை கண்டுபிடித்து விடுகிறான். லாரியை ஓட்டி செல்லும் ஸ்ரீவள்ளியின் தந்தையும் இன்னொருவனையும் கைது செய்கிறான். அவர்கள் புஷ்பாதான் இதை கடத்த சொன்னதாக சொல்கின்றனர். கோவிந்தப்பா அவர்களிடம் மங்களம் சீனு கொண்டா ரெட்டி மூலம் பெரிய அளவு செம்மரத்தை கடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதைபற்றிய துப்பு கொடுத்தால் விட்டுவிடுவதாகவும் சொல்கிறான்.

மங்களம் சீனு செம்மர கடத்தல் சிண்டிகேட் தலைவன். கொண்டா ரெட்டி போல் பலரிடமிருந்து செம்மரங்களை வாங்கி மொத்தமாக சென்னைக்கு கடத்தி அங்கிருந்து முருகன் என்ற வியாபாரி மூலம் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவன். பூமிரெட்டி சித்தபா நாயுடு M L A அனைத்திற்கும் பின்னனியில் இருப்பவர். மங்களம் சீனு கொண்டா ரெட்டியை சந்திக்கிறான். போலிஸ் கெடுபிடி அதிகமிருப்பதால் அவனிடமுள்ள மொத்த செம்மரங்களையும் கொண்டா ரெட்டி கிடங்கில் பாதுகாக்க சொல்கிறான். ஆனால் கிடங்கிற்கு பெண் பித்தன் ஜோலி ரெட்டி பொறுப்பாளனாக இருப்பதால் தயங்குகிறான். ஆனால் கொண்டா ரெட்டி புஷ்பாவை மங்களம் சீனுவுக்கு அறிமுகம் செய்கிறான். இவன் ரொம்ப திறமைசாலி இவன் வந்த பிறகு ஒரு கட்டையை கூட போலிஸ் பிடித்ததில்லை என்று சொல்கிறான். மங்களம் சீனு கொண்ட ரெட்டியிடம் சரக்கை ஒப்படைத்துவிட்டு செல்கிறான்.

இரவுக்குள் சரக்கை இடமாற்ற சொன்னதை செய்யாமல் ஒரு பெண்ணை கடத்தி வந்து உல்லாசமாக இருக்கிறான் ஜோலி ரெட்டி. புஷ்பாவிற்கு இந்த விவரம் தெரிந்து அந்த பெண்ணை அனுப்பி வைத்துவிட்டு செம்மரத்தை இடமாற்ற முயலும் முன் போலிஸ் அங்கே வருவதை தெரிந்து கொள்கிறான் புஷ்பா. அனைத்து கட்டைகளையும் ஆற்றில் வீசுகிறான். மொக்கையிடம் சொல்லி அணையை மூட சொல்கிறான். கோவிந்தப்பா தலைமையில் போலிஸ் சோதனைக்கு வரும்போது செம்மரம் ஏதுமில்லாத காரணத்தால் வெறும் கையுடன் திரும்புகின்றனர். சரக்கு அனைத்தையும் காப்பாற்றியதற்காக கொண்டாரெட்டி மற்றும் புஷ்பாவிற்கு பார்ட்டி கொடுக்கிறார் மங்களம் சீனு. அப்போது ஒரு லோடுக்கு 2 கோடி லாபம் கிடைப்பதாகவும் கொண்டாரெட்டிக்கு 25 லட்சம் மட்டுமே கொடுப்பதாகவும் தகவலை தெரிந்து கொண்ட புஷ்பா அதை கொண்டாரெட்டியிடம் சொல்கிறான். மங்களம் சீனுவிடம் ஒரு கோடி கேட்குமாறு சொல்கிறான். ஆனால் கொண்டாரெட்டி புஷ்பாவையை சென்று மங்களம் சீனுவிடம் பேச சொல்கிறான் கொண்டாரெட்டி. வரும் லாபத்தில் பங்கு கொடுப்பதாகவும் சொல்கிறான்.

மங்களம் சீனுவின் மச்சான் மங்களம் சீனுவின் முன்னே ஒருவனை அடித்து உதைத்துக்கொண்டிருக்கிறான். காரணம் லோடுக்கு 50 லட்சம் கேட்ட காரணத்தால். அது மட்டுமின்றி மங்களம் சீனுவின் மச்சான் அவனை கொலையும் செய்கிறான் புஷ்பாவின் கண் முன்னே. ஆனால் புஷ்பா தைரியமாக லோடுக்கு ஒரு கோடி கேட்கிறான். அவன் ஆட்களை அடித்து உதைத்துவிட்டு சென்னையில் செம்மரம் ஏற்றுமதி செய்யும் முருகனிடம் மங்களம் சீனுவின் போனிலிருந்தே சரக்குக்கு விலை பேசுகிறான். இதனால் மங்களம் சீனுவிற்கு புஷ்பாவின் மேல் கோபம் வருகிறது.

இதற்கிடையில் மொக்கை ஸ்ரீவள்ளியின் தந்தையிடம் புஷ்பாவிற்கு ஸ்ரீவள்ளியை திருமணம் செய்து கொடுக்குமாறும் அவன் முல்லேட்டி வெங்கட ரமண ராஜூ மகன் என்றும் சொல்கிறான். புஷ்பாவும் தாயுடன் சென்று நிச்சயம் செய்ய முயலும் போது அங்கே முல்லேட்டி வெங்கடரமண ராஜூவின் முதல் மனைவி மகன் வந்து புஷ்பாவின் பிறப்பை கேவலப்படுத்துகிறான். இதனால் ஏற்படும் கைகலப்பில் புஷ்பாவின் தாயிற்கு அடிபடுகிறது. இந்த நிகழ்வால் ஸ்ரீவள்ளியின் தாய்க்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லாமல் போகிறது.

புஷ்பா நேரடியாக செம்மரங்களை சென்னைக்கு எடுத்து சென்று இரண்டு கோடி ரூபாய்க்கு விற்கிறான். இதை கொண்டாரெட்டியிடம் சொல்கிறான்.

செம்மரக்கட்டைகள் சார்ந்த தகவலை போலிஸிற்கு கொடுத்தவர்கள் ஸ்ரீவள்ளியின் தந்தையும் உடன் சென்ற மற்றொருவனும் என்று தெரிந்த ஜோலி ரெட்டி ஒருவனை கொலை செய்கிறான். ஸ்ரீவள்ளியுடன் உல்லாசமாக இருக்க நினைத்த ஜோலிரெட்டி, அவளின் தந்தையை கொலை செய்யாமல் நீ என்னுடன் இருக்க சம்மதித்தால் உன் தந்தையை உயிரோடு விட்டுவிடுவதாக சொல்கின்றான்.

ஸ்ரீவள்ளி புஷ்பாவை சென்று சந்தித்து விஷயத்தை சொல்கிறாள். ஆனால் புஷ்பாவோ நான் எதற்கு உனக்கு உதவவேண்டுமென்று கேட்கிறான். அதற்கு நான் ஆரம்பம் முதலே உன்னைத்தான் காதலிக்கிறேன். இப்போது என் தந்தைக்காக அவனுடன் இருக்க சம்மதம் ஆனால் நாளை என் தந்தை மட்டுமே வருவார் நான் உயிரோடு வரமாட்டேன். அதற்கு முன் நான் நேசிக்கும் உன்னுடன் இருக்க விரும்புகிறேன் என்று சொல்கிறாள். அவள் தன்னை காதலிப்பது உண்மை என்று தெரிந்த புஷ்பா ஜோலி ரெட்டியை அடித்து நடக்கமுடியாமல் செய்து ஸ்ரீவள்ளியையும் அவள் தந்தையையும் காப்பாற்றுகிறான். இந்த நிகழ்வால் ஸ்ரீவள்ளியின் தாய்க்கு புஷ்பாவின் மீது நல்லெண்ணம் வருகிறது. ஸ்ரீவள்ளியை புஷ்பாவிற்கு திருமணம் செய்து கொடுக்க சம்மதிக்கிறாள்.

இதற்கிடையில் தன் தம்பியை அடித்து முடமாக்கியது புஷ்பா என்று கொண்டா ரெட்டி தெரிந்து கொள்கிறான். எதுவும் தெரியாதது போல் புஷ்பாவை அழைத்துக்கொண்டு சென்னையில் விற்ற செம்மரத்திற்கான பணத்தை வாங்குவதற்கு செல்கின்றான். பணத்தை வாங்கிகொண்டு திரும்பும் போது கொண்டாரெட்டியும் சத்தா ரெட்டியும் புஷ்பாவை கொல்ல முயல்கின்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்கின்றான் புஷ்பா. ஆனால் மங்களம் சீனுவின் மச்சான் கொண்டா ரெட்டி, சத்தா ரெட்டி மற்றும் புஷ்பாவை கொல்ல அடியாட்களுடன் வருகிறான். சத்தா ரெட்டியை கொல்ல முயலும் போது புஷ்பா காப்பாற்றி மங்களம் சீனுவின் மச்சானை கொல்கிறான். கொண்டா ரெட்டியிடம் நம்மிடையே உள்ளது தனிப்பட்ட பிரச்சனை அதை பிறகு பார்த்துகொள்ளலாம் என்று சொல்கின்றான் புஷ்பா. கொண்டா ரெட்டி சத்தா ரெட்டி புஷ்பா மூவரும் இணைகின்றனர். மங்களம் சீனு தனது மச்சானின் பிணத்தை வாங்க கொண்டா ரெட்டியிடம் வருகிறான். பஞ்சாயத்துக்கு சிண்டிகேட்டின் மறைமுக தலைவனான பூமிரெட்டி சித்தபா நாயுடு M L A வை கூட்டி வருகின்றான். பஞ்சாயத்துக்கு வரும் சித்தபா நாயுடு சிண்டிகேட் தலைவனாக இருக்கும் மங்களம் சீனு சிண்டிகேட்டை ஏமாற்றி கொள்ளையடிப்பதை சொல்கிறான் புஷ்பா. இதை கேள்விப்பட்ட சித்தபா நாயுடு M L A மங்களம் சீனு ஏமாற்றி வருவதை தெரிந்து சிண்டிகேட் தலைவனாக புஷ்பாவை நியமிக்கிறான்.

அப்போது புதிதாக போலிஸ் உயரதிகாரியாக மாற்றலாகி வருகிறான் பன்வார் சிங் ஷெகாவத். டெரர் மற்றும் கொடூர குணம் கொண்டவன் ஷெகாவத். வழக்கம் போல் போலிஸ் அதிகாரிகளை கவனிப்பது போல் ஷெகாவத்திற்கும் லஞ்சம் கொடுக்க செல்கிறான் புஷ்பா. கெத்தாக அவன் முன் மரியாதை கொடுக்காமல் உட்காருகிறான் புஷ்பா. லஞ்சப்பணத்தை கொடுத்துவிட்டு தனக்கு அடுத்த வாரம் திருமணம் வந்துவிடுமாறு சொல்கிறான். தனக்கு மரியாதை கொடுக்காத புஷ்பாவை தந்தை பேர் தெரியாவதன் என்று சொல்லி அவமானப்படுத்துகிறான் ஷெகாவத். அவனை கைது செய்து உன் கல்யாணத்தையும் நிறுத்துவேன் என்று சொல்கிறான். வேறு வழியின்றி மரியாதை கொடுக்கிறான் புஷ்பா. ஷெகாவத்தின் அடிமைபோல் செயல்படுகிறான் புஷ்பா. புஷ்பாவின் திருமணத்தன்று கூட மண்டபத்தில் இல்லாமல் ஷெகாவத் கூட இருக்கிறான். ஷெகாவத்தின் துப்பாக்கியை எடுத்து ஷெகாவத்திடம் தன்னை அவமானப்படுத்தியற்கு பழி வாங்க போவதாக சொல்கிறான். ஷெகாவத்தை நிர்வாணப்படுத்தி அனுப்புகின்றான். மண்டபத்திற்கு வந்த புஷ்பா ஸ்ரீவள்ளியின் கழுத்தில் தாலி கட்டுகிறான்.

இரண்டாம் பாகத்திற்கு ஏராளமான விஷயங்களை இயக்குனர் முதல் பாகத்தில் வைத்துள்ளார். முக்கியமாக ஷெகாவத் புஷ்பா இடையிலான மோதல். மங்களம் சீனு என்ன செய்யப்போகிறார். புஷ்பாவிடம் அடிவாங்கி பழிவாங்குவதாக சவால்விட்ட ஜோலி ரெட்டி இப்படி ஏராளமான கதாப்பாத்திரங்கள் எதிர்பார்ப்புகளுடன் முதல் பாகத்தை முடித்துள்ளார் இயக்குனர்.

பாராட்டுக்குறியது.:

டான் கதைகள் ஏராளமாக இருக்கும் போது அதை வித்தியாசப்படுத்த கதாப்பாத்திரங்களை வித்தியாசமாகவும் எதார்த்தமாகவும் சித்தரித்து படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர்.

புஷ்பா கதாப்பாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் அல்லு அர்ஜூன், கச்சிதமாக பொருந்தியுள்ளது போல் நன்றாக நடித்துள்ளார்.

ஸ்ரீவள்ளி கதாப்பாத்திரத்தில் கிராமத்து நாயகியாகவும் ரசிகர்களை மகிழ்விக்க இதுவரை நடித்த படங்களை விட கவரும் வகையில் நடித்துள்ளார் ரஷ்மிகா மந்தனா.

மங்களம் சீனு கதாப்பாத்திரத்தில் சுனில் இதுவரை நடிக்காத வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளதோடு மிரட்டியுள்ளார்.

ஒளிப்பதிவாளர் திரைப்படத்தின் பிரமாண்டத்தை கண்ணெதிரே கொண்டு வந்துள்ளார்.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பின்னணி இசையில் படத்திற்கு உயிரூட்டியுள்ளார். அது மட்டுமின்றி பாடல்கள் அனைத்திலும் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். ராஜலக்ஷ்மி பாடிய சாமி சாமி பாடலும், ஆண்டிரியா பாடியுள்ள ஊ சொல்றியா இல்லை ஊகூம் சொல்றியா பாடலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

தமிழில் கந்தசாமி படத்திற்கு பிறகு விவேகா இந்த படத்திற்கு பாடல்கள் அனைத்தையும் எழுதியுள்ளார். மொழிமாற்று பாடல் என்றாலும் தமிழில் அந்த அடிப்படை எதுவும் தெரியாமல் அருமையாக உள்ளது.

இடைவேளைவரை படம் விறுவிறுப்பாக செல்கிறது. குறிப்பாக்க அல்லு அர்ஜூன் பேசும் வசனங்கள், மொக்கையுடன் புஷ்ப ராஜ் பேசும் வசனங்கள் ரசிகர்களை குஷிப்படுத்துகின்றனர். குறிப்பாக ஸ்ரீவள்ளியை காதலிக்க வைக்க இவர்கள் செய்யும் சேஷ்டைகள் அருமை.

நெருடலானவை.:

படத்தின் இடைவேளை வரை விறுவிறுப்பாக செல்லும் படம் இடைவேளைக்கு பின் சற்று தொய்வாக உணர முடிகிறது.

வழக்கமான டான் கதைதான் தமிழில் பில்லா 2 படத்தின் திரைக்கதையை ஒட்டியிருப்பதை போல் உணரமுடிகின்றது.

ஷெகாவத் கதாப்பாத்திரம் வெட்டி பந்தாவுடன் அறிமுகமாகிறது. அறிமுகமான பின் சலிப்பைத்தான் ஏற்படுத்துகிறது. ஒருவேளை இரண்டாம் பாகம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பதை பார்க்க வேண்டும். முதல் பாகத்தை பொருத்தவரை பகத் பாசிலின் ஷெகாவத் கதாப்பாத்திரம் பெரிய தாக்கத்தை எதுவும் ஏற்படுத்தவில்லை.

தொகுப்பு.:

வழக்கமான டான் கதையென்றாலும் அதையும் பிரமாண்டமாகவும் எதார்த்தமாகவும் வித்தியாசமான கதைக்களத்திலும் சொல்லியுள்ளனர். அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, சமந்தா, சுனில், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், ஒளிப்பதிவாளர் மிர்ரேஸ்டா கூபா புரோஷெக். பின்னனி பாடகர்கள் ராஜலக்ஷ்மி, ஆண்டிரியா, கவிஞர் விவேகா போன்றோர் ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளனர். புஷ்பா தி ரைஸ் உண்மையிலே ரைஸ் (உயர்வு) தான். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பெரும்பாலும் பூர்த்தி செய்துள்ளது.

Movie Gallery

  • review

    Tamannah

  • review

    Subiksha

  • review

    Aishwarya Lekshmi

  • review

    Priya Bhavani Shankar

  • review

    Sherin Shringar

  • review

    Priyanka Arul Mohan

  • review

    Nidhi Agarwal

  • review

    Parvati Nair

  • review

    Vega Tamotia

  • review

    Kannika Ravi

  • review

    Parvathy Omanakuttan

  • review

    Diva Dhawan

  • review

    Losliya

  • review

    Keerthy Suresh

  • review

    Meera Jasmine

Marrige Registration in Chennai

Subam Associates

Marriage Registration in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.

Register Marriage in Chennai

Subam Associates

Register Marriage in Chennai

We Simplify Procedure For Register The Marriage In Chennai. We Assist To Get Married Legally And Get Marriage Certificate Quickly In Three Easy Steps. We simplify Register Marriage in Chennai / Marraige Registration in Chennai.